» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டில் சிறை வைப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 3, ஜனவரி 2025 10:28:35 AM (IST)
தூத்துக்குடியில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை போலீசார் வீட்டில் சிறை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜன.3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு வேன் மூலம் மதுரைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் போலீசார் பாஜக மகளிர் அணி பொறுப்பாளர்களை வீட்டில் சிறை வைத்துள்ளனர். இதில், தூத்துக்குடி பெருமாள்புரத்தில் பாஜக மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் லதா இன்று காலை மகளிர் அணியினரை அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்நிலையில், நேற்று இரவு போலீசார் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். மேலும், அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வீட்டில் சிறை வைத்தனர்.
இதுகுறித்து மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் லதா கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் மகளிர் அணி நிர்வாகிகளை வீட்டில் சிறை வைத்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.