» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீட்டுக் காவலில் பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
வெள்ளி 3, ஜனவரி 2025 11:31:34 AM (IST)
பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி, தி.மு.க. நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது தி.மு.க. அரசு.
இந்த தி.மு.க. ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் தமிழக பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? தி.மு.க. அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா? என்று தெரிவித்துள்ளார்.