» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஹனிஷ் சாப்ரா ஆய்வு
புதன் 22, ஜனவரி 2025 3:46:58 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனிஷ் சாப்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைகோடி மக்களுக்கு அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் சென்றடைய என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பதோடு, பணிகள் குறித்த ஆய்வு அறிக்கையினை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒருபகுதியாக இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வல்லம்குமாரவிளை அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுவதை குறித்து, ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மாணவர்களின் கற்றல் திறனை அறியும் விதத்தில் அவர்களை வாசிக்க வைத்து, அவர்களை உற்சாகமூட்டியதோடு, அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து வல்லம்குமாரவிளை அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தங்களது ஆய்வக பாடங்கள் குறித்த செயல்முறை விளக்கம் கேட்டறியப்பட்டதோடு, மாணவ மாணவியர்களுடன; கலந்துரையாடினார்கள்.
மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இருளப்பபுரம் கலைநகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வலம்புரிவிளையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.129.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தொல்லவிளை மற்றும் கிருஷ்ணன்கோவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை பதிவேடு, ஆய்வக பரிசோதனை கூடம், மருந்துகளின் இருப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து அங்கு வருகை தந்துள்ள நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை சார்ப்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாத்தியார்விளை பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகளின் வீட்டிற்கு சென்று வழங்கப்படும் சிகிச்சை முறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, தெரிவித்தார்கள்.
கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிகல்வி சாராதா, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய மாவட்ட செயற்பொறியாளர் கோபால கிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் ரகுராமன், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.