» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

புதன் 26, மார்ச் 2025 8:06:49 AM (IST)

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனோஜ் சினிமாவில் மணிரத்னம், ஷங்கர் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ரஜினியின் எந்திரன் படத்திலும் உதவி இயக்குனராக இருந்தார். 1999-ல் வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை பாரதிராஜவே இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.

மேலும் பாரதிராஜா இயக்கிய ஈர நிலம் மற்றும் அல்லு அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், சாதுரியன், பேபி படங்களிலும் கதாநாயகனாக நடித்து இருந்தார். ஆனாலும் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் கதாநாயகனாக நீடிக்க முடியவில்லை.

இதையடுத்து சரத்குமார், முரளியுடன் இணைந்து சமுத்திரம் படத்தில் நடித்தார். பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்திலும் முரளியுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது,

அன்னக்கொடி, வாய்மை, சாம்பியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்த மார்கழி திங்கள் படத்தை மனோஜ் இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.

சாதுரியன் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மலையாள நடிகை நந்தனாவை காதலித்து 2006-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஷிதா, மதிவதனி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்து இயக்க மனோஜ் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணம் திரையுலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மரணம் அடைந்த மனோஜ் உடல் சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மனோஜ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நடிகரும், இயக்குனர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்''என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory