» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல்துறைக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்

வியாழன் 17, ஏப்ரல் 2025 5:41:53 PM (IST)

"தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. போலீஸ் அதிகாரிக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான்" என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த சத்யஜோதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தனது சகோதரர் வெள்ளைக்காளி தற்போது சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 

சமீபத்தில் மதுரையில் கிளாமர் காளி என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் வெள்ளைக் காளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், போலீசார் உள்நோக்கத்துடன் வெள்ளைக்காளியை இந்த வழக்கில் தொடர்புபடுத்தி உள்ளனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் என்பவர் சமீபத்தில் என்கவுன்ட்டரில் இறந்துவிட்டார். எனவே, வெள்ளைக்காளியையும் போலீசார் என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே, அவரது விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையின் பெயரில் வெள்ளைக்காளியை அழைத்துச் சென்று என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி கூறுகையில், "தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. போலீஸ் அதிகாரிக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான். குற்றவாளிகளை காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள்.. புழல் சிறையில் உள்ள வெள்ளை காளியை மதுரை திருமங்கலம் கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது அவருக்கு ஆபத்து ஏற்பட்டால், அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். .

இதனிடையே அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு போலீசாரை ரவுடிகள் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

ஆமாம்Apr 18, 2025 - 08:25:05 AM | Posted IP 162.1*****

அப்படியே நம் நாட்டில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகளை என்கவுன்ட்டர் பண்ணுங்க உங்களுக்கு புண்ணியமாக போகும்.

இந்தியன்Apr 17, 2025 - 08:04:51 PM | Posted IP 162.1*****

நாளுக்குநாள் ரௌடிகள் தமிழ்நாட்டில் பெருகிக்கொண்டு வருகிறார்கள்.அவர்களை கட்டுப்படுத்துவதற்கு என்கவுண்டர் தவிர வேறு வழி இல்லை.நாடு மோசமான நிலையில் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory