» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல் கோடநாடு வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும்: முதல்வர் பேட்டி
வியாழன் 15, மே 2025 8:40:39 AM (IST)
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல் கோடநாடு வழக்கிலும் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர், முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்று, பாகன்களுக்கான வீடுகளை திறந்து வைத்து வனத்துறையினருக்கு 32 வாகனங்களை வழங்கி, வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு வழங்கினார்.
இந்தநிலையில் நேற்று காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட (எச்.ஏ.டி.பி.) திறந்தவெளி மைதானத்தில் மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது கோடை கால பயிற்சியில் ஈடுபட்டு இருந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது நடைபயிற்சி சென்றார்.
400 மீட்டர் தூரம் கொண்ட மைதானத்தை 5 முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வந்தார். பின்னர் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளிடம் உரையாடி மகிழ்ந்ததோடு, புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்த விளையாட்டு வீரர்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஊட்டியில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.143 கோடியே 69 லட்சம் செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். அந்த மருத்துவமனையில் அவர் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அவர், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். சிகிச்சைக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு "மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு "இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48” திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் டாக்டர்களை கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, மருத்துவப் பணியாளர்களின் வருகை பதிவேடுகள், மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர், மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் என்னென்ன? என்பது குறித்து கேட்டறிந்தார்.
மாணவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘புதிய மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை கொடுப்பது ஒரு பிரச்சினை அல்ல, சுலபம். நாங்கள் ரூபாயை ஒதுக்கிவிடுவோம். இதை பயன்படுத்தும் நீங்கள்தான் பேணி பாதுகாக்க வேண்டும். எல்லா சொத்துகளை விட கல்விதான் முக்கியமான சொத்து என்பது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் கல்விக்கு முக்கியத்துவம் தரும் ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆக, இந்த ஆட்சிக்கு நீங்களும் பக்கபலமாக இருக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஊட்டியில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஊட்டியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் யார் விளையாட்டுத்துறை அமைச்சர் என்று உங்களுக்கு தெரியும்? தற்போது யார் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும். தற்போது விளையாட்டு துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், வெளிநாட்டு வீரர்கள் கூட தமிழகத்தில் வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யார் குற்றவாளியாக இருந்தாலும், அவர்கள் எப்பேர் பட்டவர்களானாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரசாரம் செய்தேன். அதுபோலவே தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
சட்டமன்ற கூட்டத்தில் கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி என்று பேசினேன். பொள்ளாச்சி வழக்கை போல கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நல்ல தீர்ப்பு விரைவில் வரும். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தார். அது ஏன்? என்று உங்களுக்கே தெரியும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கும், மெட்ரோ ரெயில் திட்டத்திற்காகவும் சென்று வந்தேன் என்று எடப்பாடி பழனிசாமி பொய் கூறுகிறார்.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து கூறிய செல்லூர் ராஜூ ஒரு கோமாளி. ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக இருந்தது. அதற்காக தான் நான் ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினேன்.
கடந்த மாதம் 6-ந் தேதி திறந்து வைத்த நீலகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்து உள்ளேன். இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறப்பான முழு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவ-மாணவிகளை சந்தித்து, அவர்களது குறைகள் பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் எந்த குறையும் இன்றி சிறப்பாக உள்ளதாக கூறினர். வேறு எந்த வசதி தேவைப்பட்டாலும் உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, நீலகிரி எம்.பி., ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா ராமச்சந்திரன், நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, துணை முதல்வர் டாக்டர் ஜெயலலிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கைக்கு 600 லிட்டர் பெட்ரோல் கடத்தல்: நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் கைது
வெள்ளி 16, மே 2025 5:45:37 PM (IST)

அ.தி.மு.க, பேரூராட்சி தலைவியின் வெற்றி செல்லாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!
வெள்ளி 16, மே 2025 5:39:36 PM (IST)

10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு: மே 19ல் தற்காலிக சான்றிதழ்!
வெள்ளி 16, மே 2025 5:24:52 PM (IST)

ஒரே மையத்தில் 167 பேர் பிளஸ் 2 வேதியியலில் 100 மதிப்பெண் : அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
வெள்ளி 16, மே 2025 5:09:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 16, மே 2025 4:53:42 PM (IST)

வரும் 2026 மட்டுமல்ல, 2031, 2036-லும் திமுக ஆட்சிதான் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
வெள்ளி 16, மே 2025 3:57:59 PM (IST)
