» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது இருப்பு பாதைகள் சர்வேக்கு அனுமதி!!

வியாழன் 15, மே 2025 10:42:28 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது இருப்புபாதைகள் சர்வேக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் பொது பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் உள்ள திட்டங்கள் நிதி ஒதுக்கீடு போன்ற விவரங்கள் அதாவது பிங் புத்தகம் கடந்த சில மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த விவரங்கள் புதிய ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாலும், பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதாலும், குமரி மாவட்ட பயணிகள் அதிக அளவில் தற்போது ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோபார்க், ராக்கெட் நிலையம், விமான நிலையம், வங்கிகள், மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் குமரிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

திருவனந்தபுரத்திலிருந்துகன்னியாகுமரிக்குவரும் 86 கி.மீரயில்பாதையில் 57 கி.மீ தமிழகத்திலும் 29 கி.மீ கேரளாவிலும் உள்ளது. இந்த பாதையில் தற்போது கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் வரை உள்ள பகுதிகள் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது பகுதியாக நாகர்கோவில் முதல் இரணியல் வரை உள்ள பாதை இருவழிபாதையாக மாற்றும் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. 

இந்த பாதை இந்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்படும். இதைப்போல் கேரளா பகுதியில் திருவனந்தபுரம் முதல் திருவனந்தபுரம் தெற்கு அதாவது நேமம் வரை இருவழி பாதை பணிகள் படுவேகமாக நடைபெற்றுவருகின்றது. குழித்துறை மற்றும் பாறசாலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள நான்கு குகைகள் இடித்து மாற்றம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் ரயில்வேதுறை திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை உள்ள 71 கி.மீ தூரத்தில் மூன்றாவது இருப்பு பாதை அமைக்கும் திட்டத்திற்கு இறுதி கட்ட இட ஆய்வுக்கு அனுமதி அறிவித்துள்ளது. இந்த இறுதிக்கட்ட ஆய்வுக்கு ஒரு கி.மீ க்கு இரண்டு லட்சம் வீதம் மொத்தம் 1.41 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்த ஆய்வு இன்னும் சில மாதங்களில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் இவ்வாறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பின்னர் ஒரு தனியார் நிறுவனம் சார்பாக இந்த ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வுகள் தெற்கு ரயில்வேக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சர்வேயில் போக்குவரத்து சர்வே, தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு வை மேம்படுத்துதல், முழுமையான திட்ட அறிக்கை தயாரித்தல், ரேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்தல் ஆகிய அம்சங்கள் உட்படுத்தி இருக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வைக்கப்படும் ஆய்வின் அடிப்படையில் இந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி தேவைப்படும், எவ்வளவு ரேட் ஆப் ரிட்டன் கிடைக்கும், எந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும், என்று அனைத்து வகையான தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். இந்த அறிக்கையை ஆய்வு செய்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பின்னர் நிதிஅயோக்கின் திட்டமதி ப்பீடுமற்றும் மேலாண்மை பிரிவு ஒப்புதல் மற்றும் பாரத பிரதமர் தலைமையிலான பொருளாதார தொடர்பான அமைச்சரவை குழு இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்தால் இந்த திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

தற்போது இருவழிபாதை நடைபெற்று வரும் நிலையில் மூன்றாவது பாதை அமைக்க அறிவிப்பு வெளிவந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஏன் இப்போது மூன்றாவது பாதை அமைக்க வேண்டும் அதற்கான தேவை உள்ளதா? என்று யோசிக்கும் போது நமக்கு தெரிவது விழிஞம் துறைமுகம் ஆகும். கடந்த வாரம் பாரத பிரதமர் மோடி அவர்கள் விழிஞம் துறைமுகம் திறந்து வைத்தார். 

இந்த துறைமுகம் திறக்கப்பட்டதால் இந்த தடத்தில் சரக்கு போக்குவரத்து அதிகமாக வர இருக்கிறது. கேரளாவில் பெரிய தொழிற்சாலைகள் சுத்தமாக இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் இந்த துறைமுகம் கேரளாவில் இருந்தாலும் சரக்கு போக்குவரத்துக்கு தமிழ்நாடு தொழிற்சாலைகள் நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த விழிஞம் துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ரயில் பாதை இந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் பாதை வழியாக தான் வரவேண்டும். இந்த நிலையில் மூன்றாவது இருப்பு பாதை அமைக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் பாதை அதிக இட நெருக்கடியுடன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில் இனி சரக்கு ரயில்கள் இயக்கும் போது இடநெருக்கடி இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பகுதியில் மூன்றாவது பாதை அமைக்கும் தேவையும் உள்ளது. 

இந்த மூன்றாவது பாதை அமைக்கப்பட்டால் இரண்டு பாதைகளில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் ஒரு பாதையில் முழுவதும் சரக்கு பாதையில் இயங்கும். இவ்வாறு சரக்கு பாதையாக இயங்குவதால் பயணிகள் ரயில்கள் இயக்குவதற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்க வாய்ப்பு இல்லை.

நிலம் - மொத்தம் 567 ஹெக்டேர்
பெரிய ஆற்று பாலங்கள் - 3
பெரிய பாலங்கள் - 16
சிறிய பாலங்கள் - 405
மேம்பாலங்கள் - 29
கீழ் பாலங்கள் - 12
பெரிய குகைகள் - 2
அதி கூர்மையான வளைவுகள் -4
ஆள் உள்ள ரயில்வே கிராசிங் கேட் - 39
ஆளில்லா கிராசிங் கேட் - 0
வாகனம் செல்லும் மேம்பாலங்கள்- 29
பயணிகள் செல்லும் மேம்பாலங்கள்- 11
தண்ணீர் செல்லும் மேம்பாலங்கள்- 15

மொத்தரயில் நிலையங்கள்:
நேமம்
பாலராமபுரம்
நெய்யாற்றன்கரை
தனுவச்சபுரம்
அமரவிளை
பாறசாலை
குழித்துறைமேற்கு
குழித்துறை
பள்ளியாடி
இரணியல்
வீராணிஆளுர்
நாகர்கோவில் டவுண்
நாகர்கோவில் சந்திப்பு
கன்னியாகுமரி

மூடப்பட்டரயில்நிலையங்கள்
சுசீந்தரம்
தாமரைகுளம்
அகஸ்தீஸ்வரம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory