» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலைத் தடுப்புச்சுவரில் மோதி எலக்ட்ரிக் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது: 21 பேர் காயம்!

திங்கள் 30, ஜூன் 2025 8:42:32 AM (IST)



கோவை அருகே சாலைத்தடுப்பு சுவரில் மோதிய எலக்ட்ரிக் ஆம்னி பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் காயம் அடைந்த 21 பேர் பஸ் கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்டனர்.

திருச்சியில் இருந்து கோவைக்கு தனியார் எலக்ட்ரிக் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் பசுபதி ஓட்டி வந்தார். கண்டக்டராக அபிஷேக் இருந்தார். அந்த பஸ் திருப்பூரில் சில பயணிகளை இறக்கி விட்டு பிறகு கோவை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர்.

நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். அந்த பஸ் கருமத்தம்பட்டி மேம்பாலம் அருகே வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, மேம்பாலத்தையும், அணுகுசாலையையும் பிரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் மீது வேகமாக மோதியது.

இதனால் அயர்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் முன்பக்க இருக்கைகளின் மீது மோதியும், பஸ்சுக்குள் கீழே விழுந்தும் பலத்த காயம் அடைந்தனர். இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறித் துடித்தனர்.

இதற்கிடையே ஆம்னி பஸ்சின் பேட்டரியில் இருந்து புகைமூட்டம் வந்தது. உடனே பஸ் டிரைவர் பயணிகளை சீக்கிரமாக பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு கூறினார். அதை கேட்ட பயணிகள் தூக்க கலக்கத்தில் பஸ்சில் இருந்து இறங்க முயன்றனர். இதில் சிலரால் பஸ்சில் இருந்து வேகமாக இறங்க முடியவில்லை.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து சூலூர் நோக்கி லாரியை ஓட்டி வந்த சபரிமலை, மாற்று டிரைவர் ரமேஷ் ஆகியோர் பஸ்சில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பேட்டரியில் இருந்து எழுந்த புகை திடீரென்று, தீப்பிழம்பாக மாறி பஸ் முழுவதும் பரவியது. பின்னர் தீ வேகமாக பஸ் முழுவதும் குபுகுபு என்று பற்றி எரிந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் மற்றும் சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த பஸ் முற்றிலும் எரிந்து கருகி எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இந்த விபத்தில் 21 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

M BabuJun 30, 2025 - 10:17:20 AM | Posted IP 172.7*****

maram nada sonna atha seiyama electric bus bike car nu poranga ketta veppam agurathu korayumam maram nadunga pa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory