» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:32:11 PM (IST)

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இருக்கன்குடி மாரியம்மன் கோவில், தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் விழாக்கள் நடைபெறும் சிறப்பு வாய்ந்த மாதங்கள் ஆகும்.

அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு நடந்து வந்து அம்மனை வழிபடுவர். விரதமிருந்து அக்னி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை சுமந்தும், அலகு குத்தியும், மொட்டையடித்தும் நேர்த்தித்திக்கடன் செலுத்துவார்கள். கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு நைவேத்யம் படைத்தும் வழிபடுகின்றனர்.

இக்கோவிலுக்கு திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை குடும்பத்துடன் பாதயாத்திரையாக வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு விழா காலங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையன்று இக்கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அன்றைய தினம் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, அம்மன் சப்பரத்தில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை வந்தடைவார். இத்திருவிழா ஒரு வார காலம் விமரிசையாக நடைபெறும்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகையான திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனை அடுத்து காலை 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் திருக்கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி திருவிழா கொடியினை ஏற்றினர்.

கொடியேற்ற நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, திருக்கோவில் செயல் அலுவலர் இளங்கோவன், பரம்பரை அரங்காவலர் குழு உறுப்பினர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory