» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார் : வழக்கறிஞர் தகவல்

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 5:14:35 PM (IST)

அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் நேரில் வரமாட்டார் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, அவரை செயல் தலைவராக நியமித்ததோடு மட்டுமல்லாமல், இனிமேல் நான்தான் பாமகவுக்கு தலைவராக இருப்பேன் என்று ராமதாஸ் அறிவித்தார். ஆனால், பொதுக்குழு மூலம் கட்சியின் விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட என்னை தலைவர் பதவியில் இருந்து யாராலும் நீக்க முடியாது என்று அன்புமணி கூறி வருகிறார். 

இரு தரப்பினரும் கட்சி நிர்வாகிகளை மாறி மாறி நீக்கியும், நியமித்தும் வருகின்றனர். அன்புமணி தலைமையிலான பாமக வரும் 9-ம் தேதி அன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அன்புமணி அழைப்பு விடுத்திருக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, கட்சியின் தலைவர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாகப் பேச வேண்டியிருப்பதால், இருவரையும் தனது அறைக்கு நேரில் வருமாறு கூற முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வருமாறு ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பின்போது, கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் நேரில் வரமாட்டார் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை என நீதிபதிக்கு கடிதம் அளிக்க ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory