» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் 2ஆயிரம் கிலோ வெடிமருந்து பறிமுதல்: பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:52:48 AM (IST)



கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து கடத்திச் சென்ற வேன் சிக்கிய சம்பவத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், தமிழக அரசு சார்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இருந்து வேன் மூலம் கேரளத்துக்கு ஜெலட்டின் வெடிபொருள் கடத்தப்படுவதாக இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெலட்டின் கடத்திச் செல்லும் வேனைப் பிடிக்க அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இறங்கினர். இன்று அதிகாலை 4 மணியளவில் கேரளத்தை நோக்கிச் சென்ற வேனை மதுக்கரை அருகே பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வேனில் சோதனை செய்ததில் ஜெலட்டின் குச்சிகள் பெட்டி பெட்டியாக இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இவற்றின் மொத்த எடை 2 ஆயிரம் கிலோ இருக்கும் என முதல்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கடத்தப்பட்ட வேனை மதுக்கரை காவல் நிலையத்துக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

வேனை ஒட்டிச் சென்ற ஓட்டுநர் சுபேரையும் கைது செய்து மதுக்கரை காவல் துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளத்தில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கொண்டு செல்லப்பட்டதாக ஓட்டுநர் சுபேர் தெரிவித்துள்ளார்.

இதற்கு உரிமம் உள்ளதா?, 2 ஆயிரம் கிலோ வெடி மருந்து ஜெலட்டின் குச்சி கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் உள்ளதா என்று விசாரணை நடைபெறுகிறது. மேலும் அதன் உரிமையாளர் குறித்தும் விசாரணை நடக்கிறது. இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் மதுக்கரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory