» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 172 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்: 8500 மாணவர்கள் பயன்..!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:16:15 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் நகரப்பகுதிகளில் இருக்கின்ற 172 பள்ளிகளில் உள்ள ஏறத்தாழ 8500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் இன்று (26.08.2025) சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் வட்டம், வடக்கு ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் தொடக்கப்பள்ளியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவினை அருந்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சி சிறப்பாக இன்றையதினம் நடைபெறுகிறது. கடந்த நாட்களில் கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலுகின்ற மாணவ மாணவியர்கள் பயன்பெறுகின்ற வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதன்தொடர்ச்சியாக பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட நகரப்பகுதிகளிலும் படிக்கின்ற குழந்தைகள் பயன்பெறும் வகையில் இன்றையதினம் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் நகரப்பகுதிகளில் இருக்கின்ற 172 பள்ளிகளில் உள்ள ஏறத்தாழ 8500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் டாக்டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் சத்துணவு திட்டம் என மாற்றம் செய்யப்பட்டு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் பள்ளி மாணவர்களுக்கு முட்டைகளை வழங்கி முழுமையான சத்தான திட்டமாக மாற்றினார்கள். 

காலைப் பொழுதில் பணிக்கு சென்று அல்லல்படும் தாய்மார்களின் நிலையினை கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் சென்னையில் தொடங்கி வைத்திருக்கிறார்கள். 

நமது தூத்துக்குடி மாவட்டத்திலும் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தாய்மார்களும் மகிழ்ச்சியடைகிறார்கள், மேலும் பள்ளி மாணவர்களின் வளர்ச்சியும் எளிதாக இருக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

மக்கள் அனைவரும் இப்படியொரு திட்டத்தை எவரால் கொண்டுவர முடியும் என்று நினைக்கின்ற வகையிலும், எல்லா மாநில முதலமைச்சர்களும் இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்திறீர்கள் என்று கேட்கின்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் பல்வேறு வகைகளில் தமிழகத்தில் உள்ள மாணவர்களின் உயர்வு ஏற்படுதவற்கு ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நாகராசன், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமலாதின், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory