» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)



காந்தியடிகளின் 157- வது பிறந்தநாளையொட்டி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் 157-ஆவது பிறந்தநாளையொட்டி, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் கிராம அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று (02.10.2025) முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்: அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 கிராமிய நூற்பு நிலையங்களும் 1 கதர் உபகிளைகள், மற்றும் நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய 3 கதர் அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. 3 கிராமிய நூற்பு நிலையங்களில் 35 நூற்பாளர்கள், 1 கதர் உபகிளைகளிலும் 7 கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கதர் கிராமத் தொழில்கள் வாரியம் சார்பாக அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகும், மைலாடியில் குளியல் சோப்பு அலகும் மற்றும் கோட்டாரில் காலணி உற்பத்தி அலகும் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் அண்ணல் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைப்பிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் கிராம அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கி வைக்கப்பட்டள்ளது. மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன் குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று கதர், பாலிவஸ்தரா மற்றும் பட்டு ரகங்களுக்கு 30%-ம் உல்லன் ரகங்களுக்கு 20%-ம் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் நாகர்கோவில், குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அண்ணல் காந்தியடிகளின் 157-வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இராணிதோட்டம், விவேகானந்தபுரம், படந்தாலுமூடு, திருவட்டார், திங்கள்சந்தை மற்றும் ஊராட்சி ஒன்றியம் அகஸ்தீஸ்வரம், தோவாளை, இராஜாக்கமங்கலம், குருந்தங்கோடு, கல்குளம், திருவட்டார், மேல்புறம் முஞ்சிறை, கிள்ளியூர் ஆகிய இடங்களில் 03.10.2025 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படும்.

அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கதர் விற்பனைக்குறியீடாக ரூ.4 கோடியாகும். இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண்ஜெகத் பிரைட், மண்டல தலைவர் ஜவஹர், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் ஊராட்சிமன்றகுழு உறுப்பினர் விஜிலா, மநாகராட்சி உறுப்பினர் ரோஸிட்டா திருமால், வழக்கறிஞர் சதாசிவம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் சரவணன், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory