» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்த போதை ஆசாமி கைது!

திங்கள் 17, நவம்பர் 2025 8:47:52 AM (IST)

குளச்சல் அருகே ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை தாக்கி சாலையில் தள்ளிவிட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள காக்காவிளையை சேர்ந்தவர் பிஜிலிகர் (44). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குளச்சல் பணிமனையில் கண்டக்டராக பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு குளச்சலில் இருந்து குறும்பனை வழியாக கருங்கல் செல்லும் தடம் எண் 88-பி பஸ்சில் பணியில் இருந்தார். அந்த பஸ் குளச்சல் அண்ணாசிலை சந்திப்புக்கு வந்து விட்டு மீண்டும் கருங்கல் செல்ல புறப்பட்டது.

அப்போது குறும்பனை இனிகோ நகரை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான ராஜன் (56) என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் கண்டக்டர் பிஜிலிகர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். ஆனால் அவர் டிக்கெட் எடுக்க மறுத்து விட்டார். அத்துடன் ராஜன், கண்டக்டரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டார்.

குளச்சல் அரசு மருத்துவமனை முன்பு சென்ற போது திடீரென காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளினார். இதில் கண்டக்டர் படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். எனினும் ஆத்திரம் தீராத ராஜன், கீழே விழுந்த கண்டக்டரை மீண்டும் தாக்கினார். இதில் பயந்து போன கண்டக்டர் அங்கிருந்து எழுந்தபடி அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நோக்கி ஓடினார். ஆனாலும் அவரை மீண்டும் தாக்க துரத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் அங்கு கூடினர்.

இதனை தொடர்ந்து ராஜன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த கண்டக்டர் பிஜிலிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அறிந்த பணிமனை போக்குவரத்து தொழிலாளர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். கண்டக்டர் பிஜிலிகரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். 

இந்த சம்பவத்தால் குளச்சல் அரசு மருத்துவமனை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தாக்குதல் குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார், ராஜன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து

இதுNov 17, 2025 - 10:22:58 AM | Posted IP 172.7*****

திராவிட மாடல் சத்துப் பானம் நல்லா வேலை செய்யுது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory