» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டித்வா புயல் முன்னேற்பாடு நடவடிக்கைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

வெள்ளி 28, நவம்பர் 2025 3:13:29 PM (IST)



'டித்வா' புயல் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.11.2025) சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து டித்வா புயலை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற காணொலிக் காட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு, அலுவலர்களுக்கு தெரிவித்ததாவது: வங்கக் கடலில் உருவான டித்வா புயல் தற்சமயம் இலங்கையின் மேல்நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையிலே நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை (29.11.2025) மற்றும் நாளை மறுதினம் (30.11.2025) ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து துறையினரும் முறையான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கவும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் அறிவுறுத்தினார். மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

அத்துடன், முகாம்களில் மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனறும், குடியிருப்பு பகுதியில் வெள்ளநீரை அகற்றிட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், புயல் காற்றினால் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டால், அதனை சீர்செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதேப்போல் மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணித்து மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவி முதலிய பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும், மின்கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் செல்லாத வகையில் அறிவிப்புகள் மூலம் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும்,

அனைத்து கள அலுவலர்களும் முழு அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று முன்னெச்சரிக்கை செய்யப்பட வேண்டும் எனவும்,

மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். மழையால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory