» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் முற்றுகை!
புதன் 3, டிசம்பர் 2025 8:09:21 PM (IST)

குரும்பூர் கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக அங்கமங்கலம் வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பாதிக்கப்பட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 2021 செப்.8ம் தேதி மற்றும் 13ம் தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டபோது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது. மாயமான நகைகள் இருப்பில் இல்லை என்றும், இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மோசடி நடந்து 5 வருடங்களுக்கு மேலாகியும் பணமோ, நகையோ மீட்டு தரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்தவர்களுக்கு மட்டும் அவர்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் பணத்தையும், மாயமான நகைகளையும் இன்று வரை மீட்டுதரவில்லை. இந்நிலையில் மாயமான நகைகளையும், டிப்பாசிட் பணத்தையும் மீட்டுதரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அங்கமங்கலத்தில் நடந்த அரசு விழாவுக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது அவர் காரைவிட்டு இறங்கி விழாவுக்காக நடந்து சென்றபோது, அங்கு குரும்பூர் கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டுறவு வங்கி போராட்டக்குழு தலைவர் பிரபாகரன் தலைமையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம், நகை பணம் திருடுபோய் 5 வருடங்களாகப்போகிறது. ஆனால் இதுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தமிழக அரசுதான் முழு பொறுபேற்று எங்கள் நகைகளையும், பணத்தையும் மீட்டுத்தர வேண்டும். நாங்கள் உங்களுக்குத்தான் வாக்கு அளித்தோம். நீங்கள்தான் எங்கள் நகை, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மீட்டு தராவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம். மேலும் தீவிர தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. மோசடியில் ஈடுபட்ட வங்கி செயலாளர் வீட்டை ஜப்தி செய்து வங்கி மூலம் ஏலத்திற்கு விடும் பணியில் வங்கி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
ஆனால் அதுவும் சூழ்ச்சியால் நடைபெறவில்லை. உங்களுக்காக தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் நான் எப்போதும் துணை நிற்பேன். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு வரும் என்றார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை எரிப்பு!
புதன் 3, டிசம்பர் 2025 8:19:45 PM (IST)

தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2பேர் கைது : 18½ பவுன் நகைகள் பறிமுதல்!!
புதன் 3, டிசம்பர் 2025 4:51:24 PM (IST)

நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடியவில்லை: திமுக அரசை சாடிய விஜய்!
புதன் 3, டிசம்பர் 2025 4:41:21 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 3, டிசம்பர் 2025 4:13:49 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
புதன் 3, டிசம்பர் 2025 3:41:45 PM (IST)

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் : தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!
புதன் 3, டிசம்பர் 2025 12:37:54 PM (IST)


