» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: 12 மணி நேரம் நீடித்த பரபரப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 10:43:16 AM (IST)

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் நேற்று இரவு தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்ததால் பதற்றம் நிலவியது. இதனால் அதிருப்தி அடைந்த இந்து முன்னணி, பாஜகவினர் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் நவ. 25-ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீபத் திருவிழாவையொட்டி நேற்று காலை வைரத் தேரோட்டம் நடைபெற்றது. வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன் தீபம் ஏற்றப்படும். இந்நிலையில், நடப்பாண்டு மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் முழுவதும் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குரிய நெய், காடாத்துணி போன்றவற்றை நேற்று பிற்பகல் கோயில் பணியாளர்கள் கொண்டு சென்றனர்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு, மாலை 5 மணியளவில் 16 கால் மண்டபம் முன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், மாலை 6 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் உச்சிப் பிள்ளையார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் பரவியது.
இதனால் அதிருப்தி அடைந்த இந்து முன்னணி, பாஜகவினர் மற்றும் பக்தர்கள் திரண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி கோஷமிட்டபடி, போலீசாரின் தடைகளை அப்புறப்படுத்தி 16 கால் மண்டபம் வரை முன்னேறினர்.
அவர்களைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் உள்ளிட்ட சிலர் காய
மடைந்தனர். பின்னர் தடைகளை மீறி "வீரவேல், வெற்றிவேல், முருகனுக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியவாறு கோயிலை நோக்கி ஏராளமானோர் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கள் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவை ஆட்சியர் பிரவீன்குமார் பிறப்பித்தார்.
இதையடுத்து, மலையேறும் இடத்தில் தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. மதுரையின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு: திருப்பரங்குன்றத்தில் நேற்று காலை முதலே பரபரப்பு நிலவியது. நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்பட்டுவிடும் என்று பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசுத் தரப்பு மிக உறுதியாக இருந்தது. இரவு 9 மணிக்குப் பின்னரும் தீபம் ஏற்றபடுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பதால் பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சிஐஎஸ்எப் வீரர்கள்... நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால், இது தொடர்பாக தாக்கலான அவமதிப்பு வழக்கை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. குறைபாடுகளுடன் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கான தந்திரமாகும். கோயில் செயல் அலுவலர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மனுதாரரின் அடிப்படை உரிமைகளும் அடங்கியுள்ளன. சட்டத்தின் ஆட்சி ஆபத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளது.
யாரையும் தூக்கிலிடவோ, கட்டிடத்தை இடிக்கவோ உத்தரவிடவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பு என்று கூறக்கூடிய தர்கா தரப்பில், நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரவில்லை. உத்தரவுக்கு கீழ்ப்படிவதை உறுதி செய்வது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கில் அத்தகைய அணுகுமுறையைப் பின்பற்ற விரும்புகிறேன்.
மனுதாரர் 10 பேருடன் மலைக்குச் சென்று, தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கிறேன். இதை நிறைவேற்ற மனுதாரருக்கும், அவருடன் செல்பவர்களுக்கும் பாதுகாப்புக்காக உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு சிஐஎஸ்எப் கமாண்டருக்கு உத்தரவிடுகிறேன்.
இந்த உத்தரவை நிறைவேற்றி, நாளை (இன்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். இதையடுத்து, 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் மனுதாரர் மலைமீது ஏற முயன்றார்.
ஆனால், மதுரை காவல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, 144 தடை உத்தரவு இருப்பதால் கூட்டமாக மலையேற அனுமதிக்க முடியாது. மனுதாரர் வழக்கறிஞர்கள் தரப்பில் "2 பேர் மட்டும் சென்று தீபம் ஏற்றுகிறோம்” என்று கூறியதையும் போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர்.
இன்று விசாரணை: தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்தி ரன் தலைமையிலான அமர்வில் முதல் வழக்காக விசாரிக்கப்படுகிறது.
அரசு திட்டமிட்டே தடுத்துவிட்டது: ராமரவிக்குமார், வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "144 தடை உத்தரவை காட்டியும், மேல் முறையீடு செய்துள்ளதாகவும் கூறி அனுமதிக்க மறுக்கின்றனர். தமிழக அரசு திட்டமிட்டு இதை செய்கிறது. நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று கண்டிப்பாக தீபம் ஏற்றுவோம்” என்றனர். இதற்கிடையில், 65 சிஎஸ்ஐஎப் வீரர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:48:07 PM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: காவல்துறை அனுமதி கோரி தவெக மனு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:30:25 PM (IST)

கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்திற்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 4, டிசம்பர் 2025 4:10:42 PM (IST)

திருவண்ணாமலையில் கார்த்திகை மஹா தீபம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 4, டிசம்பர் 2025 12:45:15 PM (IST)

டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:56:27 AM (IST)



BalaDec 4, 2025 - 01:13:00 PM | Posted IP 162.1*****