» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை : அமைச்சர் வழங்கினார்

செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:34:43 AM (IST)



கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பேரூராட்சிகள் துறை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கி பேசுகையில்-நாம் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இத்தாய் தமிழ்நாடு ஆனது அமைதி, வளர்ச்சி, ஒற்றுமை என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மாநிலம் ஆகும். பல்வேறு உலக நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுதும், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஒப்பிட்டு பார்க்கையில் தமிழ்நாடு பெற்றிருக்ககூடிய வளர்ச்சியானது மிகவும் அற்புதமான ஒன்றாகும். 

அனைத்து சமூக மக்களும் இணைந்து வாழ்கின்ற ஒரு அற்புதமான மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. பரவலாக்கப்பட்ட சமூகப் பொருளாதாரம் காணப்படுகிறது. நம்முடைய மாநிலத்திற்குட்பட்ட பிள்ளைகள் விரும்பிய கல்வியை பயில்வதற்கு அரசு பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண்கல்லூரிகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகள் என ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும். 

தமிழ்நாடு முதலமைச்சர் கடைபிடித்து வரும் முக்கிய கொள்கை சமத்துவம் சமதர்மம் ஆகும். நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்கும் போது ஒரு வார்த்தை கூறினார்கள். அது என்னவென்றால் எல்லோரையும் உள்ளடக்கிய ஆட்சி. காரணம் யார் ஒருவரும் நிறம், இனம், மொழி, பாலினம், வேலை உள்ளிட்ட காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே. அந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான் இன்று மாவட்டத்திற்குட்பட்ட பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

ஜூன் 1,2015 அன்று தொடங்கப்பட்ட திட்டமான வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு என்ற பரந்து விரந்த திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்குட்பட்ட கிராமங்களில் உள்ள குடிசை வீடுகள், மண் சுவர், ஓலை மற்றும் வைக்கோல்களால் வேயப்பட்ட கூரை முதலானவை கடுமையான வானிலை நிலவும் காலங்களில் வசிக்க முடியாதவைகளை நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய வகையில், அனைத்து காலநிலைகளில் வசிக்கக்கூடிய வகையிலான செங்கல், சிமென்ட் இரும்பு போன்றவற்றால் கட்டப்பட்ட காரை வீடுகள் (கான்கீரிட்) ஆக மாற்றுவதே ஆகும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோருக்கு, அவருடைய பெயரிலேயோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயரிலேயோ வீடு பெறலாம். 

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 2021-22 மற்றும் 2023-24 இன்கீழ் (PMAY - HFA) கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் 2392 பயனாளிகளுக்கு ரூ.5023.20 இலட்சம் மதிப்பீட்டில் பணி உத்தரவு வழங்கப்பட்டு 1659 பயனாளிகள் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 733 பயனாளிகள் வீடுகள் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது.

அதனடிப்படையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (2.0) 2025-26 கீழ் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட 24 பயனாளிகளுக்கும், அருமனை பேரூராட்சிக்குட்பட்ட 29 பயனாளிகளுக்கும், கடையால் பேரூராட்சிக்குட்பட்ட 40 பயனாளிகளுக்கும், கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 16 பயனாளிகளுக்கும், மயிலாடி பேரூராட்சிக்குட்பட்ட 37 பயனாளிகளுக்கும், பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட 26 பயனாளிகளுக்கும்,புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட 23 பயனாளிகளுக்கும், திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட 35 பயனாளிகளுக்கும், 

திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட 32 பயனாளிகளுக்கும், வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குட்பட்ட 28 பயனாளிகளுக்கும், வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட 39 பயனாளிகளுக்கும் விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட 50 பயனாளிகளுக்கும் என ஆக மொத்தம் 12 பேரூராட்சிகளுக்குட்பட்ட 386 பயனாளிகளுக்கு தலா ரூ.2.50 இலட்சம் வீதம் ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் சுமார் 2000 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் மறுகட்டுமான திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி எல்லோரையும் உள்ளடக்கிய ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. எனவே வீடு இல்லாத இத்திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்.
 
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவஹர், பேரூராட்சி தலைவர்கள் பெனிலா ராஜேஷ் (திருவட்டார்), பில்கான் (விலவூர்), சுஜிர் ஜெயகுமார் (வேர்கிளம்பி), ஜூலியட் (கடையால்), விஜயலெட்சுமி (மயிலாடி), லெதிகா மேரி (அருமனை), அன்பரசி (அகஸ்தீஸ்வரம்), அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவக்குழு உறுப்பினர் பாபு, செயல் அலுவலர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory