» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரக வேலைவாய்ப்பு திட்டம் : சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேறியது!

வெள்ளி 23, ஜனவரி 2026 12:46:57 PM (IST)

தமிழக சட்டசபையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்-அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாட்டில் பாகுபாடின்றி மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறோம். 

இருப்பினும் தமிழ்நாட்டை வஞ்சிப்பதை மத்திய அரசு கொள்கையாக கொண்டிருக்கிறது. திட்டங்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.1,026 கோடியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. நிதியை விடுவிக்காததால் எளிய மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஏன் இந்த ஓரவஞ்சனை? மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 100 நாட்கள் வேலையை உறுதி செய்து ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றன.

100 நாள் வேலை திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை நீக்கி பல்வேறு உள்நோக்கங்களுடன் விபி- ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பெயரை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மாநில செயல்திறன்படி நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய முந்தைய ஆண்டு ஒதுக்கீட்டுக்கு குறையாமல் நிதி ஒதுக்க வேண்டும். வேலைக்கான தேவைக்கேற்ப ஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசு வகுக்க அனுமதிக்க வேண்டும். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிதிப் பங்களிப்பு போல புதிய திட்டம் திருத்தப்பட வேண்டும் என்றார். இதையடுத்து ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory