» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை அரசுப்பள்ளி உணவில் பல்லி: 43 மாணவர்கள் பாதிப்பு - இபிஎஸ் கண்டனம்!

புதன் 11, மார்ச் 2026 10:55:14 AM (IST)

கோவை அரசுப்பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்டதால் 43 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று மதிய உணவு உட்கொண்ட 43 மாணவ, மாணவியருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. மதியம் பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்ததாகவும், அந்தச் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிட்டதாலேயே மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: "கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் 43 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. 

சிகிச்சையில் உள்ள பிள்ளைகளைக் காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது. இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்தும், சில ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிடாமல் தவிர்த்தது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் உயிர் மற்றும் சத்துணவு போன்ற முக்கியமான திட்டங்களில் அரசு தொடர்ச்சியாக அலட்சியம் காட்டி வருகிறது.

2021-ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற உணவால் பாதிக்கப்பட்டும், அது குறித்துக் கவலைப்படாமல் "சாம்பார் சுவை எப்படி?" என மேடை போட்டு விளம்பரம் செய்வதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது. இறுதியாக, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரியச் சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாணவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory