» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க. தலைமையில் தான் ஆட்சி : இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு!
வியாழன் 19, மார்ச் 2026 8:28:45 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற கொள்கை நிலைப்பாட்டில் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; நமது தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ரமலான் மாதத்தையொட்டி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரு நாள் முழுவதும் நோன்பு இருந்து, மாலை இஸ்லாமியச் சகோதரர்களுடன் இணைந்து தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் அனைவருக்கும் நோன்புக் கஞ்சி வழங்கி, அவரும் பருகினார்.
நிகழ்ச்சியில் தொண்டர்களிடையே உரையாற்றிய விஜய் பேசியதாவது: "அனைவருக்கும் வணக்கம். நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்தே பல வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நாம் இன்னாரது 'டீம்' என்று அடையாளப்படுத்த முயன்றார்கள். ஆனால், நாம் 'மக்கள் டீம்' என்பது அனைவருக்கும் தெரிந்த பிறகு, இப்போது புதிய அவதூறுகளைக் கிளப்புகிறார்கள்.
இந்த விஜய் அந்தக் கூட்டணியில் சேரப் போகிறார், இந்தக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று பொய்யானப் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள். இத்தகையச் செய்திகளைக் கேட்டுத் தொண்டர்களோ, மக்களோ குழப்பமடைய வேண்டாம்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் இலக்கு குறித்துத் தெளிவாகப் பதிவு செய்தார்: "மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூக நீதி என்ற எமது நிலைப்பாட்டில் எப்போதும் சமரசம் கிடையாது. கட்சியின் முதல் மாநாட்டில் அறிவித்தபடி, நமது தலைமையில் தான் ஆட்சி என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். வேறு யார் தலைமையிலும் செல்வதற்கோ, கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ வாய்ப்பே இல்லை.
கூட்டணி தொடர்பாகப் பரப்பப்படும் எந்த அவதூறுகளையும் நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவன் அருளால் நமது இலக்கை நிச்சயம் அடைவோம். வெற்றி நிச்சயம்! அனைத்து இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது ரமலான் வாழ்த்துகள்."
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்த இப்தார் நோன்பு நிகழ்வு முழுவதையும் தேர்தல் ஆணையக் கண்காணிப்புக் குழுவினர் வீடியோ பதிவு செய்தனர். நிகழ்ச்சி தொடங்கிய நேரம், முடிவடைந்த நேரம் மற்றும் செலவினங்கள் குறித்து அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா
வியாழன் 19, மார்ச் 2026 3:14:59 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்: நாம் தமிழர் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை வெளியீடு
வியாழன் 19, மார்ச் 2026 12:36:50 PM (IST)

மாணவி கொலை வழக்கு: டிஎன்ஏ சோதனையில் சிக்கிய குற்றவாளி - ரகசிய இடத்தில் விசாரணை
வியாழன் 19, மார்ச் 2026 12:28:00 PM (IST)

பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றால் முழு ஊதியத்துடன் 12 வாரம் பேறுகால விடுப்பு
வியாழன் 19, மார்ச் 2026 12:04:16 PM (IST)

தூத்துக்குடியில் ஏ.டி.எம்-மிற்கு கொண்டு சென்ற ரூ.30 லட்சம்: பறக்கும் படை சோதனையில் விடுவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 8:34:01 AM (IST)

