» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் கீதா ஜீவன் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு!

புதன் 25, மார்ச் 2026 8:17:02 PM (IST)



சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், இன்று அமைச்சரும் மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவனின் வாகனத்தை நிறுத்தி அதிரடிச் சோதனை நடத்தினர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 45 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி 60 அடி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி. கீதா ஜீவனின் வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து, அமைச்சரின் காரில் இருந்த பைகள் மற்றும் வாகனத்தின் டிக்கி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் அதிகாரிகள் முழுமையாகச் சோதனையிட்டனர். மேலும், வாகனத்திற்கான ஆவணங்களையும் சரிபார்த்தனர். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் சிக்காத நிலையில், அமைச்சரின் வாகனம் அங்கிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டது.

அமைச்சர் ஒருவரின் வாகனத்தையே தேர்தல் அதிகாரிகள் இடைமறித்துச் சோதனை செய்த சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory