» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி: இரட்டை இலை சின்னத்தில் போட்டி
சனி 28, மார்ச் 2026 12:55:26 PM (IST)
மதுரை மத்திய தொகுதியில் புதியநீதி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குனர் -நடிகர் சுந்தர்.சி: போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.அ.தி.மு.க. - பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார். இந்த முறை, அ.தி.மு.க. சார்பில் ஒரு தொகுதியும், பா.ஜ.க. சார்பில் இன்னொரு தொகுதியும் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது.
முதற்கட்டமாக, அ.தி.மு.க. சார்பில் மதுரை மத்தி தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. சார்பில் இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில், மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. துணை தலைவரான நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டவுடன் வரும் திங்கட்கிழமை இன்னொரு வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்.
மதுரை மத்திய தொகுதியில் தற்போது தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அவர்கள் சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். 30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் முதல் பத்மநாபபுரம் வரை: திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி: வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு!
சனி 28, மார்ச் 2026 5:27:45 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி: திமுக வேட்பாளர் பட்டியல்!
சனி 28, மார்ச் 2026 4:23:58 PM (IST)

பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் புகார்!
சனி 28, மார்ச் 2026 3:59:14 PM (IST)

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் முழு விவரம் வெளியீடு
சனி 28, மார்ச் 2026 3:44:51 PM (IST)

