» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் ஏன் போட்டியிடவில்லை? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை!

சனி 4, ஏப்ரல் 2026 11:01:41 AM (IST)



2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாதது குறித்து எழுந்த பல்வேறு யூகங்களுக்கு, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று (ஏப்ரல் 3) வெளியானது. இதில் தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அண்ணாமலையின் பெயர் இல்லாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது: "நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது திடீர் முடிவல்ல. இது குறித்து நீண்ட நாட்களுக்கு முன்பே கட்சித் தலைமையிடம் எழுத்துப்பூர்வமாகக் கடிதம் அளித்துவிட்டேன். மாநில மையக்குழு கூட்டத்திலும் எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தேன். அதனால் தான், டெல்லிக்கு அனுப்பப்பட்ட உத்தேசப் பட்டியலிலேயே எனது பெயர் இடம்பெறவில்லை.

தேர்தலில் போட்டியிடுவதை விட, கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யவே நான் விரும்புகிறேன். எனது விருப்பத்தை ஏற்று கட்சித் தலைமை என்னை நட்சத்திரப் பேச்சாளராகப் பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரம் செய்யத் தயாராக இருக்கிறேன்

நான் எந்தத் தொகுதியையும் யாரிடமும் கேட்கவில்லை. கோவையில் ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ (வானதி சீனிவாசன்) இருக்கும்போது, அங்கு நான் போட்டியிடக் கோருவது சரியாக இருக்காது. அதேபோல் மொடக்குறிச்சி போன்ற தொகுதிகளில் கட்சிப் பணியாற்றியவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களாக நான் எந்தத் தொகுதியையும் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டேன்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தேசியத் தலைவர் நிதின் நவீன் ஆகியோரிடம் ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory