» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் பொது பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பங்கேற்பு

புதன் 8, ஏப்ரல் 2026 10:13:57 AM (IST)



குமரி மாவட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் இன்று (07.04.2026) நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் .பிரியங்கா பாசு இங்டி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ஓம் பிரகாஷ் ராய், , கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் .சுபாஸ்ரீ நந்தா, குளச்சல் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் .ராம்டின்லியானி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் .மனிஷா சென்டியா, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின், உள்ளிட்டவர்கள் 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் 15.03.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தல் உள்ள 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 231, குளச்சல் சட்டமன்ற தொகுதி, 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதி, 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் ஒரே கட்டமாக 23.04.2026 அன்று நடத்தப்பட உள்ளது. இதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,55,254 ஆண் வாக்காளர்களும், 7,64,958 பெண் வாக்காளர்களும், 126 மூன்றாம் பாலின வாக்காளர்கள்என மொத்தம் 15,20,338 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதில் 11,871 மாற்றுத்திறன் வாக்காளர்களில் 3,101 வாக்காளர்கள் தபால் வாக்களிக்க உள்ளார்கள். மேலும் 85 வயதிற்கு மேற்பட்ட 9725 வாக்காளர்கள் உள்ளார்கள் அவர்களில் 5451 வாக்காளர்கள் தபால் வாக்களிக்க உள்ளார்கள். தபால் வாக்கினை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடுகளுக்கு சென்று பெற்றுக்கொள்ள 149 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் மண்டல அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர், காவலர், ஒளிபதிவாளர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அல்லது முகவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த வாக்காளர்களில் வெளியூரில் பணிபுரியும் அலுவலர்களில் 1351 அலுவலர்களிடம் படிவம் 12 டி பெறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தேர்தல் பணியில் ஈடுப்படும் 9,188 வாக்களர்களிடமிருந்து படிவம் 12-மும், வெளி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் 3660 வாக்காளர்களிடமிருந்தும், 2182 காவலர்களிடமிருந்து படிவம் 12 பெறப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்துதுறை, எரிசக்தி, தீயணைப்பு துறை, பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினர், விமான போக்குவரத்து, இரயில்வே துறை, ஜெய்லர்கள், போக்குவரத்து காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட மொத்தம் 16,381 வாக்காளர்கள் தபால் வாக்குகள் செலுத்த உள்ளார்கள்.

நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 363 வாக்குச்சாவடி மையங்களும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடி மையங்களும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்களும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடி மையங்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சாவடி மையங்களும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1914 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு, உறுதிசெய்திட சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் 137 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்டதோடு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என கணக்கு எடுக்கப்பட்டு, ஒரு வாக்குச்சாவடி நிலையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரிடையாக சென்று வாக்குப்பதிவு செய்வதற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒவ்வொரு வண்ண நிறங்கள் பூசப்பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடி நிலையத்தின் முகப்பில் ஒவ்வொரு நிறத்திற்கான வாக்குச்சாவடி எண்கள் எழுதப்பட்டு, அவ்வாக்குசாவடிக்கு செல்லும் வழிகளை அம்புக்குறியிட்டு, விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறை செல்லும் பாதையும், குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு, அங்கு செல்வதற்கான வழியும் காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பெண்கள் வாக்குச்சாவடி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் என்.சி.சி, என்.எஸ்.எஸ், சாரணர் இயக்கம் உள்ளிட்டவர்கள் பார்வையற்ற, ஊனமுற்ற மாற்றுத்திறனாகள் மற்றும் முதியோர்களை வாக்குச்சாவடிகளுக்கு வீல் சேர்களில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1914 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 நபர்கள் வீதம் மற்றும் 20% கூடுதல் பணியாளர் உட்பட 9188 மாநில அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாக்குச்சாவடிகள் 658 இடங்களில் அமையப்பெற்றுள்ளது. நடைபெறவுள்ள தேர்தல் பாதுகாப்பு பணியில் 85 பி.எஸ்.எப் பணியாளர்கள், 86 இராஜஸ்தான் காவலர்கள், 4 கம்பெனிகள் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். 11 மாநில எல்லை சோதனை சாவடிகளில் 2 நபர்கள் வீதம் 3 சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 188 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாதிரி வாக்கு, படிவம் 17 சி உள்ளிட்டவைகள் குறித்து முதற்கட்ட பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிமையங்களில் பணிபுரியும் மண்டல அலுலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முடிவுற்றுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி வரும் 11.04.2026 அன்றும், மூன்றாம் கட்ட பயிற்சி 22.04.2026 அன்றும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழையத்து வயல், கீரிப்பாறை வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பர் கோதையாறு, பாலமோர் எஸ்ட்டேட், காரிமணி எஸ்டேட், மணலோடை ஆகிய 6 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அதில பாலமோர் மற்றும் காரிமணி எஸ்ட்டேட் 2 செயற்கைகோள் தொலைபேசி (Satelite phone) அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு 2 செயற்கைகோள் தொலைபேசி (Satelite phone) அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் 1950 என்ற கட்டணமில்லா தேர்தல் உதவி எண்ணில் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கு தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்யலாம். இதுவரை 1800-599-8010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்க்கு 50 புகார்களும், 9944445202 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு 17 புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதுநாள்வரை வந்த சந்தேகங்கள் மற்றும் புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதில் 901 சந்தேகங்களுக்கு பதில் அளித்து நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து cVIGIL செயலியில் 69 புகார்கள் வரப்பெற்று, 51 புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 34 புகார்களுக்கு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பறக்கும் படைகள் 18 எண்களும், நிலையான கண்காணிப்பு படைகள் 18 எண்களும் கொண்டு இம்மாவட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது. மேற்படி பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை குழுவினர்களால் 06.04.2026 மு.ப 6:00 மணி முதல் 07.04.2026 மு.ப 6:00 மணி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.64,000/- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள தொகை விவரம்

1 229, கன்னியாகுமரி ரூ.4,66,700/- - ரூ.4,66,700/-
2 230, நாகர்கோவில் ரூ.6,53,340 /- - ரூ.6,53,340 /-
3 231, குளச்சல் ரூ.14,42,050/- - ரூ.14,42,050/-
4 232, பத்மனாபபுரம் ரூ.3,33,500/- - ரூ.3,33,500/-
5 233, விளவங்கோடு ரூ.16,16,700/- ரூ.64,000/- ரூ.16,80,700/-
6 234, கிள்ளியூர் ரூ.7,80,790/- - ரூ.7,80,790/-
 மொத்தம் ரூ.52,93,080/- ரூ.64,000/- ரூ.53,57,080/-

மேலும் வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 65 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. 

எனவே நடைபெறவுள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை இலக்காக கொண்டு, வாக்குசதவீதம் குறைந்த சட்டமன்ற தொகுதிகளை கண்டறியப்பட்டதோடு, வாக்குச்சாவடிகளையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சதவீதம் குறைந்த பகுதிகளில் வாக்குச்சதவீதத்தினை உயர்த்தும் வகையில் அனைத்து துறைகளின் சார்பாக தினந்தோறும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

தேர்தல் பணிகளில் அனைவரும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு எட்டுவதோடு, நடைபெறவுள்ள தேர்தல் நேர்மையுடன் சிறப்பாக நடைபெற நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் .கு.சுகிதா (பொது), ரோஷன் பேகம் (தேர்தல்), கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் .சிவகாமி, ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண்கெகத் பிரைட், எம்.சி.சி கண்காணிப்பு அலுவலர் மற்றும் இணை இயக்குநர் வேளாண்மை வாணி, தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கருவூல அலுவலர் கிறிஸ்டி, தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory