» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலவசங்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? கட்சிகள் விளக்கமளிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்!

சனி 11, ஏப்ரல் 2026 4:17:05 PM (IST)

அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "ஒரு மனிதனுக்கு மீனைத் தர்மம் செய்வதை விட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்ற பழமொழி உண்டு. தொடர்ந்து இலவசங்களை வழங்கிக்கொண்டே இருந்தால், மக்கள் மேலும் பலவற்றை எதிர்பார்க்கும் நிலை உருவாகும். நான் எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்தையும் சாடவில்லை; இது நாடு தழுவிய போக்காக உள்ளது."

அரசாங்கங்கள் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், எந்தக் கட்சியாக இருந்தாலும், இலவசங்களை அறிவிக்கும்போது அதற்கான நிதி எங்கிருந்து திரட்டப்படும், பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீடு என்ன என்பது குறித்த தெளிவான திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

மாநிலத்தின் நிதி நிலைமையைப் பொருட்படுத்தாமல் அறிவிக்கப்படும் கவர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். "நிதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? பட்ஜெட்டை எவ்வாறு திட்டமிடப் போகிறீர்கள்?" என்று கேட்க வேண்டியது அவசியமாகும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டிருப்பதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். மக்கள் தொகையில் 50 சதவீதம் இருக்கும் பெண்கள், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்ற வேண்டியவர்கள். எனவே, அவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாது.

இது ஒன்றும் புதிய சிந்தனை அல்ல என்றும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து இம்முறை மசோதா முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory