» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசின் 10 லட்சம் கோடி கடன் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 10, மே 2026 11:28:51 AM (IST)

தமிழக அரசு தற்போது கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் கோடி கடனில் உள்ளது. கஜானாவை முழுவதுமாக வழித்து வைத்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ள நிலையில்தான் இந்தப் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம் என்று தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய் கூறினார்.
தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு. விஜய், தனது முதல் உரையை "என் நெஞ்சில் குடியிருக்கும்..." என்ற தனது டிரேட்மார்க் வாசகத்துடன் தொடங்கி, தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் தனது எதிர்காலச் செயல்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
"நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. ஒரு சாதாரண உதவி இயக்குநருக்கு மகனாகப் பிறந்து, சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறியவன். எனக்கு வறுமை என்றால் என்ன, பசி என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, அண்ணன் - தம்பியாக என்னை நினைத்ததால்தான் இன்று இந்த இடத்தை எனக்குக் கொடுத்துள்ளீர்கள்."
சினிமாவில் தனக்குக் கிடைத்த உச்சபட்ச புகழை விட்டுவிட்டு, மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே அரசியலுக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், தனக்காக அவமானங்களையும் வலிகளையும் தாங்கிக்கொண்ட தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
நிதிநிலை குறித்த 'வெள்ளை அறிக்கை:
தமிழகத்தின் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்துப் பேசிய முதல்வர் விஜய்: "தமிழக அரசு தற்போது கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் கோடி கடனில் உள்ளது. கஜானாவை முழுவதுமாக வழித்து வைத்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ள நிலையில்தான் இந்தப் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். உள்ளே சென்று பார்த்தால்தான் எதார்த்த நிலை புரியும். விரைவில் அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்."
"மக்களைச் சந்திக்க வேண்டுமென்றால் நான் முகத்தை மூடிக்கொண்டோ அல்லது மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். எதையும் வெளிப்படையாகச் செய்வேன். என்னால் எது சாத்தியமோ அதை மட்டுமே வாக்குறுதியாகக் கொடுப்பேன்; கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
சுமக்க முடியாத கடன் சுமை இருந்தாலும், கோடிக்கணக்கான மக்களின் அன்பு தன்னுடன் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக, 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 'சிங்கப்பெண்' பாதுகாப்புப் படை ஆகிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையொப்பமிட்டது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் இந்த முதல் உரை, அவர் ஒரு வெளிப்படையான மற்றும் அதிரடி மாற்றங்களைக் கொண்ட ஆட்சியைத் தரப்போகிறார் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் விஜய் முதல் கையொப்பம்!
ஞாயிறு 10, மே 2026 11:22:04 AM (IST)

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார் விஜய்: நேரு உள்விளையாட்டரங்கில் கோலாகலம்!
ஞாயிறு 10, மே 2026 11:15:05 AM (IST)

திமுகவின் மக்கள் நலத் திட்டங்களைப் புதிய அரசு தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின் விருப்பம்!
ஞாயிறு 10, மே 2026 11:13:16 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்: 9 அமைச்சர்களும் பதவியேற்பு!
சனி 9, மே 2026 7:56:19 PM (IST)

தமிழகத்தின் புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதி!
சனி 9, மே 2026 5:40:29 PM (IST)


