» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: அமைச்சர்கள் ஆ.ஸ்ரீநாத், பெ.மதன்ராஜா மரியாதை!

ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)



சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வல்லநாட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் ஆ.ஸ்ரீநாத், பெ.மதன்ராஜா ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். 

சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் படைத்தளபதியாக திகழ்ந்தார். தீரம் மிக்க இவரை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார். வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது, முதலில் சீறிப் பாய்ந்தது வீரன் வெள்ளையத்தேவன்தான். பானர்மேன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தார். போர் தொடங்கியது. அப்பொழுது வீரன் வெள்ளையத்தேவன் சுழன்று சுழன்று ஆங்கிலேயர்களை வேட்டையாடிக் கொன்றார். 

கோட்டையை பலமாக காவல் காத்தார். இவரது வீர ஆவேசத் தாக்குதலைக் கண்ட தளபதி பானர்மேன் போர் முடிவதாக அறிவித்துவிட்டுப் பாசறைக்கு திரும்பினார். போர் முடிந்து விட்டது என்று நினைத்து கோட்டையின் மீது நின்று, தன் படைகளுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்த வீரன் வெள்ளையத்தேவனை ஒரு ஆங்கிலச் சிப்பாய் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டு கொன்றான். இதைச் சற்றும் எதிர்பாராத வீரன் வெள்ளையத்தேவன் கோட்டையிலிருந்து விழுந்து மடிந்தார். இவரது மரணத்திற்கு காரணமான ஆங்கில சிப்பாயை வீரன் வெள்ளையத்தேவனின் மனைவி வெள்ளையம்மாள் குத்திக் கொன்றுவிட்டு, வீரன் வெள்ளையத்தேவனின் சாவுக்குப் பழி தீர்த்துக் கொண்டார்.

இத்தகைய வீரமிக்க போர்படைத்தளபதியாக திகழ்ந்த வீரன் வெள்ளையத்தேவன் வீரத்தினை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு வல்லநாட்டில் ழுழுஉருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளான மே 31ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று (31.05.2026) சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் 257வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வல்லநாட்டில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்  மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத்,  குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா  மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன்,  மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சரவணன்  ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும், சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் வாரிசுதாரர் அ.மாரிமுத்துக்கு  அமைச்சர் பெருமக்கள்  மற்றும் ஆட்சியர்  பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர். இவ்விழாவில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், திருவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அஹமது, வீரன் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்கள், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory