» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இரு மொழிக் கொள்கை தொடரும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: தமிழக ஆளுநர் உரை!
வியாழன் 18, ஜூன் 2026 11:12:19 AM (IST)

தமிழகத்தில் 'இரு மொழிக் கொள்கை' தொடர்ந்து தீவிரமாகப் பின்பற்றப்படும் என்றும், 'கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு' மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்லேகர் உரையில் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் தமிழகத்தின் நிதி நிலைமை, மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகள் குறித்த பல்வேறு முக்கிய விபரங்களை ஆளுநர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
ஆளுநர் உரையின் முக்கிய விபரங்கள் வருமாறு: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தவெக தலைமையிலான இந்த கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து இந்த அரசுக்குத் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், மக்களின் பேராதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. இன்று காலை சட்டமன்றத்தில் தமிழில் "வணக்கம்" கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர், "1967-ல் அண்ணாதுரை, 1977-ல் எம்ஜிஆருக்குப் பிறகு 2026-ல் தமிழகத்தில் ஒரு வரலாற்றுப் புரட்சி நடந்துள்ளது.
'விசில் புரட்சி' மூலம் இமயமலை அளவுக்கு மாபெரும் வெற்றியை விஜய் பதிவு செய்துள்ளார். சாதி, மதங்களைக் கடந்து, பணம் கொடுக்காமல் தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்" என்று பாராட்டு தெரிவித்தார்.
இரு மொழிக் கொள்கை
தமிழகத்தில் 'இரு மொழிக் கொள்கை' தொடர்ந்து தீவிரமாகப் பின்பற்றப்படும் என்றும், ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள 'கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு' மாற்ற வேண்டும் என்றும் இந்த அரசு வலியுறுத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பல்வேறு நிதிகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக, மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஆளுநர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.
தமிழகத்தின் நிதி நெருக்கடி:
மறுபுறம், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்தும் ஆளுநர் கவலை தெரிவித்தார். தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் அளவு தற்போது 10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையானது கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.48,840 கோடியாக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் அது ரூ.78,324 கோடியாக பெருமளவு அதிகரித்துள்ளது என்றும் ஆளுநர் ஆர்லேகர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!: பொதுக்குழுவில் தீர்மானம்!
சனி 20, ஜூன் 2026 5:05:37 PM (IST)

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: ஒரே நாளில் சிவகங்கை டூ மதுரைக்கு மாற்றப்பட்ட ஆட்சியர்!
சனி 20, ஜூன் 2026 3:58:57 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையின் ரூ.245.85 கோடி திட்டப்பணிகள் ரத்து : அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 20, ஜூன் 2026 3:44:34 PM (IST)

நான் முதல்வன் திட்டப் பதிவுகள் அழிப்பு: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 3:33:26 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் நிறுத்தங்கள் கிடைக்குமா? பயணிகள் கோரிக்கை!
சனி 20, ஜூன் 2026 3:17:40 PM (IST)


