» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியை உலுக்கிய டொர்னடோ சுழல்காற்று: நடந்தது என்ன? ஆய்வாளர் விளக்கம்!

திங்கள் 22, ஜூன் 2026 12:05:19 PM (IST)


தூத்துக்குடியில் அரிய நிகழ்வாக திடீரென ஏற்பட்ட 'டொர்னடோ' சூறாவளிச் சுழல்காற்று குறித்து நிலத்தியல் துறை பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார். 

தூத்துக்குடியில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில், மாலை சுமார் 3:00 மணியளவில் திடீரென வானிலை மாறி, மேகமூட்டம் சூழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் அருகே, வெளிநாடுகளில் அடிக்கடி தோன்றுவதைப் போன்ற  சுழல்காற்று (Tornado)  உருவானது. 

தரையிலிருந்து அசுர வேகத்தில் சுழன்றடித்தபடி வான்நோக்கி எழும்பிய இந்த அதிசய நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த சூறாவளி காரணமாக, வாகைகுளம் சுங்கச்சாவடியின் மேற்கூரை உள்கட்டமைப்புகள் அனைத்தும் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பெயர்ந்து, முற்றிலுமாகச் சேதமடைந்தன. இதன் காரணமாகச் சுங்கச்சாவடி இயக்கம் முற்றிலுமாக முடங்கியதுடன், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி வெளியேறி சாலையோரம் தஞ்சமடைந்தனர்.

மேலும், இந்தச் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தீம் பார்க்கிலும் சூறாவளி காற்று புகுந்ததில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பொழுதுபோக்குக் கட்டமைப்புகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் முடிவைத்தானேந்தல், புதூர், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற தீவிர சுழல்காற்று ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சுழல் காற்று ஏற்படுவது இதுவே முதல் முறை என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த அரிய நிகழ்வு குறித்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் துறை பேராசிரியர் முனைவர் செல்வம் கூறுகையில், "தூத்துக்குடி பகுதியில் அரிதான சூறாவளி காற்றுச் சுழல் போன்ற (tornado-like) வளிமண்டல நிகழ்வு பதிவாகியுள்ளது. மாலை நேரத்தில் ஏற்பட்ட பலத்த இடியுடன் கூடிய மழை (thunderstorm) நேரத்தில், மேகத்திலிருந்து தரை நோக்கி இறங்கும் சுழலும் தூசி தூண் (rotating funnel/dust column) காணப்பட்டு, அதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. 

அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, இது ஒரு சிறிய அளவிலான Tornado அல்லது "landspout” வகை நிகழ்வுஇருக்கக்கூடும். இந்த நிகழ்வு உருவாக காரணமாக, கடலோர பகுதியாக இருக்கும் தூத்துக்குடியில் இருந்து அதிகமான வெப்பமான மற்றும் ஈரமான காற்று (moist maritime air) மேலே எழுந்தது. அதே சமயம் மேல்மட்டங்களில் இருந்த குளிர்ந்த காற்று உடன் மோதியதால் வளிமண்டலத்தில் instability அதிகரித்து, காற்றின் திசை மற்றும் வேக வேறுபாடு (wind shear) மூலம் சுழற்சி உருவானது என்றும் விளக்கினார். 


இந்த சுழலும் காற்று மேலே எழும் updraft மூலம் செங்குத்தாக நீண்டு, மேகத்திலிருந்து கீழே funnel cloud உருவாகி, தரையைத் தொட்டபோது அது ஒரு குறுகிய கால Tornado ஆக மாறியது. சில தகவல்களின் படி, இது மிக நீளமான அல்லது வலுவான Tornado அல்ல; மெல்லிய, குறுகிய மற்றும் பலவீனமான சுழல் மட்டுமே காணப்பட்டது. 

இந்த நிகழ்வு முக்கியமானது என்னவென்றால், இந்தியாவில் Tornado அரிதானதுடன், தென் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அபூர்வம். பொதுவாக இத்தகைய Tornado-கள் West Bengal மற்றும் Odisha பகுதிகளில் மட்டுமே அதிகமாக பதிவாகின்றன. இன்றைய தூத்துக்குடி நிகழ்வு, கடலோர ஈரப்பதம், அதிக வெப்பநிலை, மற்றும் பலத்த இடியுடன் கூடிய மேக அமைப்பு சேர்ந்து வந்தால், தமிழ்நாட்டிலும் அரிதாக Tornado போன்ற நிகழ்வுகள் உருவாகலாம் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கிறது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory