» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குதிரை பேர விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் சிபிஐ விசாரணை கேட்பாரா? அப்பாவு கேள்வி!

வெள்ளி 3, ஜூலை 2026 5:16:19 PM (IST)

அதிமுக ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டுச் சிலர் விஷம பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவுடன் மற்றொரு கட்சி ஆட்சி அமைக்க அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டுச் சிலர் தேவையற்ற பிரசாரத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

தேர்தல் முடிவுகள் வந்த மறுகணமே நாங்கள் கண்ணியமிக்க எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும், புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கு எங்கள் தரப்பு எந்தவித முட்டுக்கட்டையும் போடாது என்றும் சொன்ன வார்த்தையைத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றளவும் மிகத் துல்லியமாகக் கடைபிடித்து வருகிறார்.

ஆனால், நடந்த உண்மை என்னவென்றால், தேர்தல் முடிவுகள் வந்த நாள் இரவே புதிய ஆளுங்கட்சித் தரப்பு, முன்னாள் ஆளுங்கட்சியின் ஆதரவைக் கோரியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி சில முக்கிய நிபந்தனைகளை விதித்ததாகவும், அதனை ஏற்காத ஆத்திரத்தில் அக் கட்சியை உடைத்துச் சின்னாபின்னமாக்கி வருவதாகவும் சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த உண்மைகளை ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தரப்பு மாற்று முகாம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து தன் பக்கம் இழுத்து வருகிறது. மேலும், வைகோவின் பத்திரிகை வாக்குமூலம் மற்றும் தொடர்ந்து மாற்று முகாம் எம்.எல்.ஏ.-க்களைப் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லிக் கட்சியில் சேர்த்துக் கொண்டிருப்பது வரை தற்போதைய ஆளுங்கட்சித் தரப்பு குதிரை பேரங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது.

இத்தொடர் குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிக்க எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, கரூரில் நேரிட்ட விபத்தில் 41 பேர் இறந்ததற்குச் சிபிஐ விசாரணை கோரியது போல், இந்த குதிரை பேர விவகாரத்திற்கும் முதலமைச்சர் விஜய் சிபிஐ விசாரணை கேட்பாரா? அல்லது தமிழகக் காவல் துறையை ஏவி எதிர்க்கட்சிகளை மிரட்டும் போக்கைக் கையாளுவாரா?" என்று அப்பாவு தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory