» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: நெல்லை ஆசிரியை உள்பட 6 பேர் பலி
செவ்வாய் 14, ஜூலை 2026 7:58:55 AM (IST)
மதுரை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதிய கோர விபத்தில் நெல்லையை சேர்ந்த ஆசிரியை உள்பட 6 பேர் பலியானார்கள். 42 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலையில் ஒரு தனியார் ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர். இந்த பஸ் நேற்று அதிகாலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் பகுதியில் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி சாலையின் மறுபக்கம் பாய்ந்தது. அந்த வழியாக மதுரையில் இருந்து பயணிகளுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்வதற்காக அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த அரசு பஸ் மீது ஆம்னி பஸ் பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் தறிகெட்டு ஓடிய ஆம்னி பஸ் மீண்டும் சாலையில் மறுபுறம் மீண்டும் பாய்ந்து பயணிகள் நிழற்குடையில் மோதி பள்ளத்தில் பாய்ந்து நின்றது. இதில் நிழற்குடை நொறுங்கியது. இந்த கோர விபத்தில், இரு பஸ்களும் பலத்த சேதம் அடைந்தன. இரு பஸ்களில் பயணித்தவர்களும் அலறினர்.
இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், நெடுஞ்சாலைத்துறை ரோந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், ஆம்னி பஸ்சில் பயணித்த நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த ஆசிரியை சிறிய புஷ்பம் (வயது 56), ஆம்னி பஸ் கிளீனர் திசையன்விளையை சேர்ந்த ஆபிரகாம் (40), அரசு பஸ்சில் வந்த துவரங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ் (46), திருச்சியை சேர்ந்த சூர்யா (29), திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த முகமது யாசின் (60) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
இதுபோல 2 பஸ்களிலும் காயத்துடன் போராடிய சிறுவர்கள், பெண்கள் உள்பட 42 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ஆம்னி பஸ் மோதி நொறுங்கிய நிழற்குடையின் கீழ் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரத்தை சேர்ந்த பெருமாள் (70) என்பவர் படுத்து தூங்கி உள்ளார். அவரும் பஸ் மோதி, பலத்த காயம் அடைந்து உயிருக்கு ேபாராடினார்.
அவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பெருமாளும் உயிரிழந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரை சரக டி.ஐ.ஜி அபினவ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
மதுரை-திருச்சி இடையே கொட்டாம்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் அடிக்கடி ஆம்னி பஸ்கள் விபத்தில் சிக்குவதாகவும், அதிவேகத்தில் பஸ்களை இயக்குவதே இந்த விபத்துக்கு காரணம் எனவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தஞ்சையை சேர்ந்த நாகராஜ் (26), அரியலூரை சேர்ந்த சந்திரா (50), குமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (46), மதுரையை சேர்ந்த நிஷா ராணி (24) உள்ளிட்டோரிடமும் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்.பி.வெங்கடேசன் ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டீன் அருள்சுந்தரேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். பஸ்கள் மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடிஷன் என்ற பெயரில் நடிகையிடம் அத்துமீறல் : போலி தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:22:47 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 4,41,667 மோதிரங்கள் கொள்முதல்: டெண்டர் அறிவிப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 10:19:34 AM (IST)

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:37:01 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.1.82 கோடியில் புதிய காத்திருப்புக் கூடம்: பணிகள் தீவிரம்
செவ்வாய் 14, ஜூலை 2026 7:35:12 AM (IST)

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்!
திங்கள் 13, ஜூலை 2026 4:02:29 PM (IST)


