» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வ.உ.சி. குறித்து நகைச்சுவை நிகழ்ச்சியில் அவதூறு: இயக்குநர் மோகன் ஜி கடும் கண்டனம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:32:50 PM (IST)

தனியார் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் குறித்து அவதூறாகப் பேசியதற்குத் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியில், போட்டியாளர்களிடம் "வ.உ.சிதம்பரனார் சிறையில் என்ன இழுத்தார்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஒரு பெண், "அவர் படகோட்டி" என்றும், மற்றொரு பெண் "கடலில் கப்பல் இழுத்திருப்பார்" என்றும் பதிலளித்தனர்.
தொடர்ந்து தொகுப்பாளர் சுட்டிக்காட்டியபோது, அந்தப் பெண் சிரித்தபடியே "இழுத்தார் என்று சொன்னதும் பாஞ்சாலி சேலையைத் துரியோதனன் இழுத்த மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்" எனக் கேலியாகப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: "மக்களுக்கு வேண்டுமானால் இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அரசியல் தலைவர்கள் எவ்வாறு அமைதியாக இருக்கிறார்கள்? ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகியையும், கப்பலோட்டிய தமிழனையும் அவமானப்படுத்திப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாற்றியுள்ளனர். தமிழர்கள் என்றால் அவ்வளவு கேவலமா?"
என்று அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆங்கிலேயரின் கடல் வணிக ஆதிக்கத்தை உடைக்கச் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தொடங்கி, சிறையில் மாடுகளுக்குப் பதிலாகச் செக்கை இழுத்துக் கொடுமைகளை அனுபவித்த வரலாற்று நாயகன் வ.உ.சி. குறித்து முறையான புரிதல் இன்றிப் பேசியதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு, நாட்டுக்காகத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றித் தெரியாதது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்களும் குழந்தைகளும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரலாற்று நாயகர்கள் குறித்துப் பேசும்போது குறைந்தபட்ச பொறுப்புணர்வும் மரியாதையும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 5:57:50 PM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியையிடம் 16 பவுன் செயின் பறிப்பு: அரசுப் பள்ளி வளாகத்தில் துணிகரம்
செவ்வாய் 28, ஜூலை 2026 5:45:40 PM (IST)

தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:10:56 PM (IST)

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு: ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறுகிறது!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:31:21 AM (IST)

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 7:33:52 AM (IST)


