» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாள் விழா : ஆட்சியர் பிரதாப் மரியாதை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:13:45 PM (IST)

மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் நாகர்கோவிலில் அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதாப், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆஸ்டின் முன்னிலையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்குப் பின் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்ததாவது: "மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான ஜூலை 31-ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று அவரது 152-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது."
பிறப்பும் கல்வியும்: கி.பி. 1874 ஜூலை 31 அன்று கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இடலாக்குடியில் பக்கீர் மீரான் - உம்மாள் ஆமீனா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து, கவிபாடும் திறன் பெற்றிருந்ததால் அனைவராலும் 'பாவலர்' என்று அழைக்கப்பட்டார்.
சதாவதான சாதனை: 1907 மார்ச் 10 அன்று சென்னை விக்டோரியா நினைவு மண்டபத்தில், வித்துவான் கண்ணபிரான் முதலியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் 100 செயல்களைச் செய்து 'சதாவதானி' என்ற சாதனைப் பட்டம் பெற்றார். நாஞ்சில் நாட்டில் தேசிய விடுதலை உணர்வூட்டும் பணிகளை மேற்கொண்ட இவர், சுதந்திர இந்தியாவைக் கண்ட பின்னர் கி.பி. 1950 பிப்ரவரி 13 அன்று காலமானார்.
செய்குதம்பி பாவலரின் புகழைப் போற்றும் வகையில் அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அவரது உருவம் பொறித்த சிறப்புத் தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் வேல் முருகன், மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட், நகர்மன்ற உறுப்பினர்கள், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம் மற்றும் பாவலரின் குடும்பத்தினரான பேரன்கள் கவிஞர் ஜமால் முகமது, ஷபிக் மீரான் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்துநகர் விரைவு ரயிலில் புகையிலைப் பொருட்கள் கடத்தல்: வாலிபர் கைது!
வெள்ளி 31, ஜூலை 2026 5:08:32 PM (IST)

பாரதியார் வணங்கிய காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: திரளான பெண்கள் தரிசனம்!
வெள்ளி 31, ஜூலை 2026 4:29:39 PM (IST)

தூத்துக்குடி 1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆய்வு: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வெள்ளி 31, ஜூலை 2026 4:09:59 PM (IST)

மின் ரீடிங் குளறுபடிகள் தீரும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
வெள்ளி 31, ஜூலை 2026 11:54:26 AM (IST)

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன நேரத்தில் மாற்றம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 11:43:41 AM (IST)

சிறுவர்களின் பைக் ரேஸ், சாகசங்களை தடுக்க நடவடிக்கை: காவல் ஆய்வாளரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 8:35:47 AM (IST)


