» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் - அவரது மனைவி கைது!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:11:26 AM (IST)

பிரபல தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரை சென்னை ஐஸ் அவுஸ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றும் 28 வயது இளம்பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: "சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் பி.ஆர். சுந்தரிடம் பேட்டி எடுப்பதற்காக, எங்கள் தொலைக்காட்சி சார்பில் அவரைச் சந்தித்தேன். 

பங்குச்சந்தை தொழில் குறித்து யூடியூப் சேனல்களில் அடிக்கடி பேட்டி கொடுத்து பிரபலமடைந்த அவர், பேட்டியின் போது என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.

நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், அவரது வீட்டில் பலமுறை அவரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது ஒருநாள், திடீரென்று என்னை கட்டிப்பிடித்துப் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டார். நான் அவரது ஆசைக்கு இணங்காமல், கடுமையாகக் கண்டனம் தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன்.

தொழிலதிபர் பி.ஆர். சுந்தரின் இந்தச் செயல் குறித்து அவரது மனைவி மங்கையர்க்கரசியிடம் கூறியபோது, அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகக் கூறி பி.ஆர். சுந்தர் என்னை வீட்டிற்கு அழைத்தார். அதை நம்பிச் சென்ற என்னை, சட்டவிரோதமாக வீட்டு அறையில் அடைத்து வைத்து மீண்டும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.

அப்போது வீட்டிலிருந்த அவரது மனைவியும் கணவருக்கு ஆதரவாகப் பேசியதுடன், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். இதனால் தொழிலதிபர் பி.ஆர். சுந்தரால் எனது உயிருக்கும் மானத்திற்கும் ஆபத்து உள்ளது. எனவே அவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இப்புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை ஐஸ் அவுஸ் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளின் கீழ், தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், பி.ஆர். சுந்தர் ஆஜராகாமல் தலைமறைவானார். தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், பெங்களூரில் தலைமறைவாக இருந்த பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசி ஆகிய இருவரையும் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு, இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory