» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையம் ஆகிறது துாத்துக்குடி!

வெள்ளி 12, ஜூலை 2024 4:05:01 PM (IST)



தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, 3,115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் உடைய இரண்டாவது பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாக துாத்துக்குடி மாறுகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு வகை போக்குவரத்து வசதியும் உடைய நகரம் துாத்துக்குடி. பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம் என, வளர்ந்து வரும் நகரமாக துாத்துக்குடி விளங்குகிறது. 'பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார்' உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என, அடுத்தடுத்து புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக, துாத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. துாத்துக்குடி - சென்னை இடையே, தினமும் ஐந்து முறையும், துாத்துக்குடி - பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கூடுதல் விமானங்களை கையாளும் வகையில், 227.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 17,341 சதுர மீட்டரில் அமைக்கப்படும் புதிய முனையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்ட டங்கள், தீயணைப்பு துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

துாத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு செல்லும் வகையில், 1 கி.மீ.,க்கு இணைப்பு சாலை புனரமைக்கும் பணியும் நடக்கிறது. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் நான்கு வாயில்களும், 21 பயணியர், 'செக் இன் கவுன்டர்'களும், மூன்று 'ஏரோ பிரிட்ஜ்'களும், இரண்டு வருகைக்கான, 'கன்வேயர் பெல்ட்'களும் அமைக்கப்படுகின்றன.

மேலும், ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், இரண்டு வி.ஐ.பி., அறைகள், 'லிப்ட்' வசதிகள், பயணியர் அதிகமாக வருகை தரும் நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு, 1,440 பயணியரை கையாளும் வகையிலான வசதிகள் என, அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டடங்கள் முழுதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 76 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய முனையத்தில், 113.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும் வந்து செல்ல முடியும். ஓடுதளம் அமைக்கும் பணி, இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, விமான நிலைய உயர் அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்ததும், சென்னை, பெங்களூருக்கு மட்டுமின்றி, ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட, நாட்டின் பெரிய நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்படும். தற்போது, 78 பயணியர் வரை செல்லும் ஏ.டி.ஆர்., ரக விமானங்கள் தான் இயக்கப்படுகின்றன.

இனி, 250 பயணியருடன் செல்லும், 'ஏ321' ரக ஏர்பஸ் விமானங்களும் இயக்கப்படும். சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3,611 மீட்டர். அதற்கு அடுத்தபடியாக, 3,115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் உடைய இரண்டாவது பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாக துாத்துக்குடி மாறுகிறது. இதன் மூலம் துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணியர் பயன் பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழில்முனைவோர் சிலர் கூறியதாவது:துாத்துக்குடி முக்கிய தொழில் நகரமாக உள்ளது. இதற்கு துறைமுகம், விமான நிலையம் இருப்பது முக்கிய காரணம். தற்போது, விமான நிலையமும் விரிவாக்கம் செய்யப்படுவதால், பயணியர் போக்குவரத்து அதிகமாகும்; சரக்குகளை அதிகம் கையாள முடியும்.ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலை சார்ந்தவர்கள் பெரிதும் பயன் பெறுவர். வர்த்தகம் மேம்படும். உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநில, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து

JEBAKUMARJul 20, 2024 - 11:05:29 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை வழியாக சென்னைக்கு ஒரு டிரெயின் விட்டால் அது பல வகையில் மக்களுக்கு பயன்படும்

TN69Jul 17, 2024 - 08:33:52 AM | Posted IP 162.1*****

ஆக்கிரமிப்பு புதன் கிழமை திட்டம் என்ன ஆனதோ!? மழை வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டு விட்டதோ??? மாநகர ஓருவழிப் பாதையில் பார்க்கிங் செய்ய இடமே இல்லை? புதிய திட்டம் உள்ளதா என்ன? சென்னைக்கு அடுத்தாற் போல் பெரிய விமான நிலையங்கள் அமைவதில் பெருமையில்லை அடிப்படை குறுகல் நெருக்கடியான நிலையில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்யாமல் இருப்பது பூசனிக்காய்க்கு மொட்டை அடிப்பதை போல் உள்ளது!!!! நம் மாநகர ஓருவழிப் பாதை சாலைகள் அனைத்துமே????!!!🙏🙏😲🤒

KaniJul 15, 2024 - 03:02:11 PM | Posted IP 172.7*****

50 ஆண்டுகளுக்குமுன் தூத்துக்குடியிலிருந்து செனை எழும்பூருக்கு தினசரி 2 விரைவு ரயில் சென்றன. தற்போது 1 விரைவ ரயில்தான் இரூக்கிறது. தூத்துக்குடி முன்னேஃ றியள்ளதா?சாமானியரை யாரும் நினைப்பதில்லை. ப்பதில்லை

Tmk kJul 15, 2024 - 11:38:31 AM | Posted IP 162.1*****

But. Job matum thooothukudi pepele kuduka mattanga

K NARAYNASAMYJul 15, 2024 - 09:47:41 AM | Posted IP 172.7*****

Tuticorin to Madurai (via)Aruppukottai NH may be upgraded to 8 lanes road, Ramanathapuram VIRUDHUNAGAR MPs please help khani,

BalamuruganJul 14, 2024 - 04:27:54 PM | Posted IP 162.1*****

👍👍👍👍👍👍👍👍👍👍

தூத்துக்குடியிலJul 14, 2024 - 04:26:11 PM | Posted IP 162.1*****

எல்லாம் நம்ம mp னால கிடைக்கிறது இதே போல அருகில் உள்ள மணியாச்சி ஜங்சனுக்கு தூத்துக்குடியில இருந்து நேரடியாக சாலை அமைத்து மாவட்டமே பயனடையும் வகையில் மணியாச்சி ஜங்சனை மாற்றவேண்டும் அப்படி மாற்றினால் கணிமொழி mp தூத்துக்குடியில் நிரந்தர எம்பியாக இருப்பார்.

A. RathakrishnanJul 14, 2024 - 03:58:42 PM | Posted IP 162.1*****

மிக்க நன்றி இதுபோன்று அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டம் மிக நன்றாக வளர்ந்து வர வேண்டும் அது மட்டுமல்ல அடுத்தபடியாக தரைவழி போக்குவரத்து ரயில் ஆறு வழிச்சாலை அல்லது எட்டு வழி சாலை மாற்றுவதற்கான ஏற்பாடு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் சென்னை போன்ற பிரிவினர்களுக்கு செல்ல ரயில்கள் இன்னும் அதிகமாக தென் மாவட்டத்தை பொறுத்த அளவுக்கு தேவை தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவை இதை உடனடியாக செய்ய வேண்டும் என்று அனைத்து மக்களின் கருத்தாக விளங்குகிறது நன்றி நன்றி

ராவுத்தர்Jul 13, 2024 - 09:13:20 PM | Posted IP 162.1*****

திருச்சி விமான நிலையம் இது போன்று மேம்படுத்த படுமாயின் எண்ணற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory