» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நிதிஷ், ரிங்கு அதிரடி: வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!

வியாழன் 10, அக்டோபர் 2024 12:12:27 PM (IST)



வங்கதேசத்திற்கு எதிரான 2வது 'டி-20' போட்டியில் நிதிஷ் குமார், ரிங்கு சிங் அரைசதம் விளாச,  இந்திய அணி 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என தொடரை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. நேற்று இரண்டாவது போட்டி, டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியில் ஷோரிபுல் நீக்கப்பட்டு தன்ஜிம் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் வர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. மெஹிதி ஹசன் வீசிய முதல் ஓவரில் சாம்சன் 2, அபிஷேக் 1 பவுண்டரி அடிக்க, 15 ரன் எடுக்கப்பட்டன. டஸ்கின் வீசிய அடுத்த ஓவரில் சாம்சன் (10) அவுட்டானார். அபிஷேக் 15 ரன் மட்டும் எடுத்து கிளம்பினார்.

பின் நிதிஷ் குமார், ரிங்கு சிங் இணைந்தனர். ரிஷாத் பந்தில் ரிங்கு ஒரு சிக்சர் அடித்தார். ரிஷாத்தின் வீசிய 10வது ஓவரில் நிதிஷ், இரு சிக்சர் அடிக்க, 24 ரன் எடுக்கப்பட்டன. இந்திய அணி 10 ஓவரில் 101/3 ரன் குவித்தது.

டஸ்கின் பந்தில் பவுண்டரி அடித்த நிதிஷ், 27வது பந்தில் சர்வதேச 'டி-20' அரங்கில் முதல் அரைசதம் விளாசினார். மெஹிதி ஹசன் வீசிய 13வது ஓவரில், நிதிஷ் குமார், 3 சிக்சர், 1 பவுண்டரி அடிக்க, மொத்தம் 26 ரன் எடுக்கப்பட்டன. 4வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த போது, நிதிஷ் குமார் (74), முஸ்தபிஜுர் பந்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, ரிஷாத் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என அடித்தார். மறுபக்கம் தன்ஜிம் பந்தை சிக்சருக்கு விரட்டிய ரிங்கு சிங், 26 வது பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 53 ரன்னில் அவுட்டானார்.

தன்ஜிம் வீசிய 19 வது ஓவரில் பாண்ட்யா ஒரு பவுண்டரி அடிக்க, ரியான் பராக் (15) அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்து, திரும்பினார். கடைசி ஓவரை ரிஷாத் வீசினார். இதில் பாண்ட்யா (32), வருண் சக்ரவர்த்தி (0), அர்ஷ்தீப் (6) அவுட்டாகினர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 221 ரன் குவித்தது. வங்கதேசத்தின் ரிஷாத் 3, டஸ்கின், தன்ஜிம், முஸ்தபிஜுர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கைத் துரத்திய வங்கதேச அணிக்கு பர்வேஸ் (12), லிட்டன் தாஸ் ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் நஜ்முல் ஷான்டோ 11 ரன் எடுக்க, லிட்டன் தாஸ் (14), வருண் சக்ரவர்த்தி வீசிய முதல் பந்தில் போல்டானார். அபிஷேக் சுழலில் தவ்ஹித் (2) போல்டானார். மகமதுல்லா மட்டும் அதிகபட்சம் 41 ரன் எடுத்தார். மற்றவர்கள் கைவிட, வங்கதேச அணி 20 ஓவரில் 135/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

வங்கதேசத்திற்கு எதிரான 'டி-20' போட்டியில் இந்தியா முதன் முறையாக, நேற்று 200 ரன்னுக்கும் மேல் (221/9) எடுத்தது. முன்னதாக சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி 196/5 ரன் எடுத்தது அதிகமாக இருந்தது

சர்வதேச 'டி-20'ல் இளம் வயதில் அரைசதம் அடித்த நான்காவது இந்தியர் ஆனார் நிதிஷ் குமார் (21 வயது, 138 நாள்). முதல் மூன்று இடத்தில் ரோகித் சர்மா (20 வயது, 143 நாள்), திலக் வர்மா (20 வயது, 271 நாள்), ரிஷாப் பன்ட் (21 வயது, 38 நாள்) உள்ளனர்.

நேற்று இந்திய அணி சார்பில் 15 சிக்சர் அடிக்கப்பட்டன. வங்கதேசத்திற்கு எதிரான 'டி-20' அரங்கில் ஒரு போட்டியில் பதிவான அதிக சிக்சராக இது அமைந்தது. இதற்கு முன் 2012, மிர்புர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 14 சிக்சர் அடித்து இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory