» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரஞ்சி கிரிக்கெட்: பாக்லே - கவுதங்கர் ஜோடி சாதனை!
வெள்ளி 15, நவம்பர் 2024 4:18:09 PM (IST)
ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு 600 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து பாக்லே - கவுதங்கர் ஜோடி வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் முதன்மை உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் 90-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'பிளேட்' பிரிவில் இடம்பெற்றுள்ள கோவா- அருணாச்சல பிரதேச அணிகள் இடையிலான ஆட்டம் கோவாவில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அருணாச்சலபிரதேச அணி 84 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக நபம் தாகன் அபோ 25 ரன்கள் அடிக்க, கோவா தரப்பில் அதிகபட்சமாக அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய கோவா 92 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 727 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. அதிகபட்சமாக காஷ்யப் பாக்லே 300 ரன்களுடனும், சினேஹல் கவுதங்கர் 314 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 606 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதன் மூலம் 90 ஆண்டு கால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு 600 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன்பு 2016-17-ம் ஆண்டு டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மராட்டியத்தின் ஸ்வப்னில் குகலே- அங்கித் பாவ்னே ஜோடி 594 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள காஷ்யப் பாக்லே - சினேஹல் கவுதங்கர் புதிய சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து 643 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய அருணாச்சலபிரதேச அணி, கோவா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 22.3 ஓவர்களில் 92 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கோவா இன்னிங்ஸ் மற்றும் 551 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.