» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’!

திங்கள் 10, மார்ச் 2025 9:02:16 AM (IST)



சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில்  நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக மகுடம் சூடியது.

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூசிலாந்து அணியில் தோள்பட்டை காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி கண்ணீர் மல்க விலகினார். அவருக்கு பதிலாக நாதன் சுமித் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரச்சின் ரவீந்திராவும், வில் யங்கும் நியூசிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்ட இவர்கள் முதல் 5 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்தனர்.

இதனால் சுதாரித்துக் கொண்ட கேப்டன் ரோகித் சர்மா, 6-வது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தார். சுழல் தாக்குதல் வந்ததும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மிரளத் தொடங்கினர். வில் யங் 15 ரன்னில், வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 28 மற்றும் 29 ரன்களில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (37 ரன், 29 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) குல்தீப் யாதவின் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து இறங்கிய அபாயகரமான பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சனையும் (11 ரன்) நிற்கவிடவில்லை. குல்தீப் வீசிய பந்தை வில்லியம்சன் தட்டிவிட்ட போது அதை அவரே கேட்ச் செய்தார். அப்போது நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 75 ரன்களுடன் தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல்லும், டாம் லாதமும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க நிதானத்தை கடைபிடித்தனர். அதே நேரத்தில் குல்தீப் யாதவ், வருண், ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல் என இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இடைவிடாது அளித்த குடைச்சலில் அவர்களின் ரன்வேகம் மிடில் ஓவர்களில் ஒரேயடியாக குறைந்தது. 13 ஓவர்கள் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை.

அணியின் ஸ்கோர் 108 ஆக உயர்ந்த போது டாம் லாதம் (14 ரன்) ஜடேஜா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்த இக்கட்டான சூழலில் களம் புகுந்த கிளென் பிலிப்ஸ் (34 ரன், 52 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஒரு மணிநேரம் தாக்குப்பிடித்து விக்கெட் சரிவை தடுத்தார். ஆனாலும் ஸ்கோர் பெரிய அளவில் நகரவில்லை.

இதன் பின்னர் டேரில் மிட்செலுடன் கைகோர்த்த ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் துரிதமாக ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினார். மறுமுனையில் மிட்செல் 91 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நடப்பு தொடரில் ஒரு வீரரின் மந்தமான அரைசதம் இது தான். மிட்செல் 63 ரன்களில் (101 பந்து, 3 பவுண்டரி) முகமது ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் சில பவுண்டரிகளும், சிக்சரும் ஓடவிட்ட பிரேஸ்வெல் அரைசதம் அடித்ததுடன், அணியின் ஸ்கோரையும் 250-ஐ தாண்ட வைத்தார்.

50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. பிரேஸ்வெல் 53 ரன்களுடன் (40 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். கடைசி 10 ஓவர்களில் அவர்கள் 79 ரன்கள் திரட்டினர். சுழல் ஜாலத்தால் எதிரணியை விழிபிதுங்க வைத்த இந்தியா 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது. பீல்டிங்கிலும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு இருந்ததால் இதைவிட குறைந்த ஸ்கோரில் அவர்களை மடக்கி இருக்கலாம். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் அடியெடுத்து வைத்தனர். 2-வது பந்திேலயே ரோகித் சர்மா சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்தினார். முடிந்த வரை வேகமாக ரன் எடுத்து நெருக்கடியை இல்லாமல் ஆட வேண்டும் என்ற முனைப்புடன் ஆக்ரோஷமாக மட்டையை சுழற்றினார். நாதன் சுமித்தின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 41 பந்துகளில் தனது 58-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 17 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது. இந்த சாம்பியன்ஸ் கோப்பையில் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் தொடக்க ஜோடி இவர்கள் தான்.

அணியின் ஸ்கோர் 105-ஐ எட்டிய போது, சுப்மன் கில் (31 ரன், 50 பந்து, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அவர் அடித்த பந்தை, ‘ஷாட் எக்ஸ்டிரா கவர்’ திசையில் கிளென் பிலிப்ஸ் துள்ளி குதித்து ஒற்றைக்கையால் பிரமாதமாக கேட்ச் செய்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி (1 ரன்) பிரேஸ்வெல் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். 

டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. 3-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் நுழைந்தார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா (76 ரன், 83 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். தொடர்ந்து சுழற்பந்து யுக்தியாலும், இறுக்கமான பீல்டிங்காலும் அவர்கள் கடும் அழுத்தம் கொடுத்தனர். இதனால் ரன்ரேட்டும் கொஞ்சம் தளர்ந்தது.

இதற்கு மத்தியில் ஸ்ரேயாஸ் அய்யரும், அக்‌ஷர் பட்டேலும் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். முக்கியமான தருணத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் (48 ரன், 62 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அக்‌ஷர் பட்டேலும் (29 ரன்) நடையை கட்டியதால் இறுதிப்பகுதியில் பரபரப்பு தொற்றியது.

பின்னர் விக்கெட் கீப்பர் ேலாகேஷ் ராகுலும், ஹர்திக் பாண்ட்யாவும் ஜோடி போட்டு சாதுர்யமாக ஆடி டென்ஷனை தணித்தனர். ஆனால் இலக்கை நெருங்கிய போது, ஹர்திக் பாண்ட்யா (18 ரன்) தேவையில்லாமல் ஒரு ஷாட்பிட்ச் பந்தை அடித்து கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த ஜடேஜா பவுண்டரியுடன் தித்திப்பாக முடித்து வைத்தார்.

இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. ராகுல் 34 ரன்களுடனும் (33 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த தொடரில், இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெற்றது. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளிலும் கைப்பற்றி இருந்தது. 2000-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது. இந்த தோல்விக்கு 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது பதிலடி கொடுத்துள்ளது இந்திய அணி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory