» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெல்லியைச் சிதறடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன் அதிரடியில் அபார வெற்றி!
புதன் 6, மே 2026 10:25:41 AM (IST)

ஐ.பி.எல். 2026 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. சஞ்சு சாம்சனின் ருத்ரதாண்டவத்தால் டெல்லி நிர்ணயித்த இலக்கை மிக எளிதாக எட்டிப்பிடித்து சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். டெல்லி அணிக்குத் தொடக்கமே சுமாராக அமைந்தது. நிசங்கா 19 ரன்களிலும், அனுபவ வீரர் கே.எல். ராகுல் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அகீல் ஹூசைன் மற்றும் நூர் அகமது ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி ரன் குவிக்க திணறியது.
பவர் பிளே முடிவில் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி, 11 ஓவர்களில் 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இறுதியில் சமீர் ரிஸ்வி (40* ரன்கள், 4 சிக்ஸர்கள்) மற்றும் ஸ்டப்ஸ் (38 ரன்கள்) ஆகியோரின் போராட்டத்தால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது.
156 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்குத் தொடக்கம் சவாலாக இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். உர்வில் படேல் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் கார்த்திக் சர்மா ஜோடி டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
குறிப்பாக 'சேட்டன்' சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் பந்துவீச்சை மைதானத்தின் வெளியெ பறக்கவிட்டார். 32 பந்துகளில் அரைசதம் கடந்த சாம்சன், 15-வது ஓவரில் நடராஜன் வீசிய பந்துகளில் 20 ரன்களைக் குவித்து வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 87 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவருக்கு 'ஆட்ட நாயகன்' விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், "சதம் அடிப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், அதற்காக நான் சுயநலமாக விளையாட விரும்பவில்லை. அணிக்காகப் போட்டியை விரைவில் முடிப்பதே எனது இலக்காக இருந்தது. சென்னை ரசிகர்களின் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது" எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வான்கடேவில் சாதனை சேஸிங்: ரோஹித் - ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 12:07:12 PM (IST)

மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி: ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
ஞாயிறு 3, மே 2026 1:42:39 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு
சனி 2, மே 2026 5:47:25 PM (IST)

இந்திய இன்டோர் ஓபன் தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் பங்கேற்பு
சனி 2, மே 2026 11:52:50 AM (IST)

ஐபிஎல் விதிமுறை மீறல்: ராஜஸ்தான் இளம் வீரரிடம் ஆக்ரோஷம் காட்டிய ஜேமிசனுக்கு அபராதம்!
சனி 2, மே 2026 11:49:03 AM (IST)

இ-சிகரெட் பயன்படுத்திய ரியான் பராக்கிற்கு அபராதம்: ஆர்.ஆர். அணி நிர்வாகத்திற்கும் பிசிசி ஐஎச்சரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:14:41 PM (IST)


