» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

லக்னோவுக்கு எதிராக பந்துவீச்சு வியூகம் பலிக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை!

சனி 16, மே 2026 4:34:27 PM (IST)



ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 59-ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷின் இடி மின்னல் வேக அதிரடி ஆட்டம் லக்னோவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்யக் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தொடக்கம் சாதகமாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்களிலும், உர்வில் படேல் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

இருப்பினும், மிடில் ஆர்டரில் களம் புகுந்த கார்த்திக் சர்மா லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 42 பந்துகளில் 71 ரன்களை விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய டெவால்டு பிரெவிஸ் 16 பந்துகளில் 25 ரன்களும், அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் தூபே தனது பங்கிற்கு 16 பந்துகளில் 32 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. ලக்னோ தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் ஷபாஸ் அகமது தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஸ் ஜோடி அதிரடியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. குறிப்பாக, சிஎஸ்கே பந்துவீச்சைத் துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ், வெறும் 38 பந்துகளில் 90 ரன்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் இங்லிஸ் 32 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து வந்த அதிரடி புயல் நிக்கோலஸ் பூரன் 17 பந்துகளில் 32 ரன்கள் விளாச, லக்னோ அணி 16.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை:

தோல்விக்குப் பிறகு பேசிய சி.எஸ்.கே. அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில்:    "இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பந்துவீசுவது சற்று கடினமாக இருந்தது. ஹார்ட் லென்த்தில் (Hard Length) பந்தை அடித்து வீசுவது சவாலாக அமைந்தது. நாங்கள் முதலில் 160-170 ரன்களைத்தான் எதிர்பார்த்தோம், ஆனால் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு 187 ரன்கள் எடுத்தோம். பேட்டிங்கைப் பொறுத்தவரை இதைவிடச் சிறப்பாக எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது.

லக்னோ அணியினர் மிக அற்புதமாக பேட்டிங் செய்து சில அசாத்தியமான ஷாட்களை ஆடினார்கள். ஜோஷ் இங்லிஸ் மற்றும் மார்ஷ் இருவரும் ஷார்ட் பால் (Short Ball) மற்றும் ஹார்ட் லென்த் பந்துகளை நன்றாக ஆடக்கூடியவர்கள் என்பதால், அதற்கு தகுந்த வியூகம் அமைத்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பந்துவீச்சில் அதைச் சரியாகச் செயல்படுத்துவதில் நாங்கள் தவறிவிட்டோம்"
    என்று வேதனையுடன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory