» சினிமா » திரை விமர்சனம்

ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் அவதாரம் - துரந்தர் 2 திரை விமர்சனம்

வெள்ளி 20, மார்ச் 2026 5:34:23 PM (IST)



கடந்த ஆண்டு இறுதியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘துரந்தர்’. தேசபக்தி மற்றும் அதிரடியான ஆக்‌ஷன் கலந்த ஸ்பை த்ரில்லர் பாணியில் வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகச் சாதனை படைத்தது. தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரெவெஞ்ச்’ வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தின் கிளைமாக்ஸிலிருந்து கதை தொடங்குகிறது. இந்திய உளவாளி ஜஸ்கிரத் சிங் ரங்கி (ரன்வீர் சிங்), ரஹ்மான் டிகைத் மறைவுக்குப் பிறகு பாகிஸ்தானின் கராச்சி நகரில் 'ஹம்சா அலி மசாரி' என்ற பெயரில் நிழல் உலக தாதாவாக உருவெடுக்கிறார். மெல்ல மெல்ல பாகிஸ்தானின் அரசியல், பயங்கரவாதம் மற்றும் அதிகார மையங்களுக்குள் ஊடுருவுகிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜய் சன்யாலின் (மாதவன்) வழிகாட்டுதலில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அதிகாரி மேஜர் இக்பால் (அர்ஜுன் ராம்பால்) மற்றும் காவல்துறை அதிகாரி சவுத்ரி அஸ்லம் (சஞ்சய் தத்) ஆகியோருடன் இணைந்து கொண்டு, பாகிஸ்தானின் பயங்கரவாத உலகை ஆட்டம் காணச் செய்கிறார். இதுவே 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடக்கூடிய ‘துரந்தர் 2’ படத்தின் கதை.
இயக்கம் மற்றும் திரைக்கதை

முதல் பாகம் பாகிஸ்தான் பயங்கரவாத நிழல் உலகத்தைப் பற்றி மேலோட்டமாகப் பேசியது என்றால், இரண்டாம் பாகம் அப்பட்டமாகப் பல விஷயங்களை முன்வைக்கிறது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஓடக்கூடிய படத்திற்குச் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்ததில் இயக்குநர் ஆதித்யா தர் வெற்றி பெற்றுள்ளார்.

பணமதிப்பிழப்பு, உ.பி. எம்.எல்.ஏ கொலை, தாவூத் இப்ராஹிம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப் பல உண்மைச் சம்பவங்களை கற்பனையோடு முடிச்சுப் போட்டிருப்பது படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சிகள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெறுகின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் ரன்வீர் சிங். படம் முழுவதையும் தனது தோள்களில் தாங்குகிறார். முதல் பாகத்தில் அக்‌ஷய் கன்னாவால் ஓரங்கட்டப்பட்டது போன்ற பிம்பத்தை இதில் தனது அபார நடிப்பால் உடைத்துள்ளார்.     மாதவன் முதல் பாகத்தைப் போலவே இதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.     சஞ்சய் தத் தனது வழக்கமான மேனரிசத்தைக் காட்டியுள்ளார்.

அர்ஜுன் ராம்பால் மிரட்டலாகத் தெரிந்தாலும், முதல் பாகத்தில் இருந்த வில்லத்தனம் இதில் சற்று குறைவசஞ்சய் சூரி (சாரா) முதல் பாகத்தில் இருந்த முக்கியத்துவம் இந்தப் பாகத்தில் இவருக்கு இல்லை.

சஷ்வத் சச்தேவின் இசை முதல் பாகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், ‘ரஸ்புடின்’, ‘தம்மா தம்மா’ போன்ற பழைய பாடல்களைப் பயன்படுத்தியது உற்சாகத்தைத் தருகிறது. ஒளிப்பதிவு மற்றும் மேக்கிங் உலகத் தரத்தில் உள்ளன.
நிறை - குறை

நிறை: ரன்வீர் சிங்கின் நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, பிரம்மாண்டமான மேக்கிங்.

குறை: படத்தின் நீளம் (3 மணி நேரம் 40 நிமிடம்), அதீத வன்முறை மற்றும் ரத்தக் காட்சிகள்.

'துரந்தர் 2' தேசப்பற்றையும் ஆக்‌ஷனையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கும் ஒரு ஸ்பை த்ரில்லர். சில அரசியல் கருத்துகளைத் தாண்டி, திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இப்படம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பு என்பதில் சந்தேகமில்லை. ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ வரிசையில் முதல் பாகத்திற்கு நியாயம் செய்த இரண்டாம் பாகத்தைத் தந்துள்ளார் ஆதித்யா தர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory