» சினிமா » செய்திகள்

மெய்யழகன் திரைப்படக் குழுவுக்கு சீமான் பாராட்டு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 12:48:51 PM (IST)



மெய்யழகன் படத்தின் டீசரை கிளர்வோட்டம் எனக் குறிப்பிட்டு வெளியிட்ட படக்குழுவினரை  சீமான் பாராட்டி உள்ளார். 

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மெய்யழகன் படத்தின் டீசர் கடந்த 7ம் தேதி வெளியானது. டீசரை தமிழில் கிளர்வோட்டம் எனக் குறிப்பிட்டு வெளியிட்டனர். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், படத்தின் டீசரை, தமிழில் கிளர்வோட்டம் எனக் குறிப்பிட்டு வெளியிட்ட மெய்யழகன் படக்குழுவினரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி - இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த்சாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

'மெய்யழகன்' என்று திரைப்படத்திற்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டியதற்கும், அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் (TEASER) என்று கூறிக்கொண்டிருக்க அதனை 'கிளர்வோட்டம்' என்று அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும்.

படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு. கிளர்வோட்டம் என்ற சொல்லாக்கம் எந்த அளவிற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.

தமிழில் மட்டும்தான் இப்படியான பொருள்பொதிந்த கலைச்சொற்களை உருவாக்க முடியும். மற்றமொழிகளில் இப்படியான கலைச்சொற்களை எளிதில் உருவாக்கிவிட முடியாது. பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால், பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லதனால் தான் தமிழ் உயர்தனிச் செம்மொழியாகப் போற்றப்படுகிறது. இதற்காகவாவது இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டுமென நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் ரேசில் கமல், அஜித் படங்கள்!

வியாழன் 12, செப்டம்பர் 2024 3:32:13 PM (IST)

சுந்தர்.சி - வடிவேலு இணையும் ‘கேங்கர்ஸ்’

வியாழன் 12, செப்டம்பர் 2024 11:28:12 AM (IST)

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory