» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என்றால் நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?



ஒருவேளை உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என்றால் நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள்? என்ற நடைமுறை கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிப்பதில் இருந்து சிகிச்சை வரை... நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

முதலில் பதற்றம், பயம் கொள்ளக்கூடாது. அதேவேளை கரோனா தொற்றின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் தாமதிக்காமல் கண்டறிய வேண்டும்.

தொற்றின் அறிகுறிகள்

1. காய்ச்சல்

2. இருமல்

3. மூக்கடைப்பு/ மூக்கு ஒழுகுதல்

4. நுகர்தல்/ சுவைத்தல் திறன் இழப்பு

5. வயிற்றுப்போக்கு

6. கண்கள் சிவந்து போதல்

7. மூச்சு விடுவதில் சிரமம்

8. மூச்சுத்திணறல்

9. அதீத உடல் சோர்வு

10. அன்றாட வேலைகளைச் செய்ய இயலாமை

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் தங்களின் குடும்பத்தாரிடம் இருந்தும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியே எங்கும் உலவக் கூடாது.

வீட்டுக்குள் ஒருவருக்குத் தொற்றுக்கான அறிகுறிகள் தொடங்கினாலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் . ஆறடி இடைவெளி விட்டு இருக்க வேண்டும். இது மற்றவருக்குத் தொற்று பரவாமல் தடுக்கும்.

இதற்கடுத்த வேலை, காலை வேளையில் அருகில் இருக்கும் அரசு சுகாதார நிலையங்களுக்குச் சென்று தொண்டை/மேல் நாசித் தடவல் பரிசோதனைக்கு சாம்பிள் கொடுக்க வேண்டும்.

பரிசோதனைக்குக் கொடுத்துவிட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை 500 மில்லிகிராம், ஆறு மணிநேரத்துக்கு ஒரு முறை போடலாம்.

அடுத்த நாள் பரிசோதனை ரிசல்ட் `நெகட்டிவ்' என்று வந்தால் அறிகுறிகள் முற்றிலுமாகக் குணமாகும் வரை தனிமையில் இருந்து வெளியே வரக் கூடாது. 'பாசிட்டிவ்' என்று ரிசல்ட் வந்தால் அரசு சுகாதாரத் துறையில் இருந்து தங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

தங்களுக்கு 45 வயதுக்குட்பட்டு இருந்தால் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய் போன்ற இணை நோய்கள் இல்லாமல் இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சொல்லி, தனியாக கழிப்பறையுடன்கூடிய அறை இருப்பின் உங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள்.

தங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் வளர்கின்றனவா, தேய்கின்றவனா என்பதைக் கண்காணித்து வர வேண்டும். அலட்சியம் ஆகாது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது உங்கள் கையில் இருக்க வேண்டியது, `ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்' எனும் கருவி.

இதை கை விரல்களில் மாட்டிவிட்டால் உடலில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவுகளைக் காட்டும். இதில் ஆக்சிஜன் அளவு 94%க்கு மேல் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

கூடவே தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் ஆறு நிமிடங்கள் தொடர்ந்து மிதமான வேகத்தில் (6 minute walking test) நடந்து விட்டு உடனே ஆக்சிஜன் அளவுகளைப் பார்க்க வேண்டும்.

நடப்பதற்கு முன்பு பார்த்த அளவைவிட 5% அளவு குறைந்திருந்தால் உடனே சுதாரிக்க வேண்டும். நுரையீரலில் கோவிட் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இவ்வாறு எந்தப் பிரச்னையும் இன்றி முதல் வாரம் கழிந்தால், மொத்தம் 14 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருந்துவிட்டு பிறகு சகஜ நிலைக்குத் திரும்பலாம். அதுவே ஆக்சிஜன் அளவுகள் 94%க்கு கீழ் குறைந்தாலோ, கூடவே மூச்சுத்திணறல், இடைவிடாத இருமல், மூச்சு விடுவதில் சிரமம், அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றினாலோ தங்களது சாதாரண கோவிட் நோய் மிதமான கோவிட் நோய் நிலைக்குச் சென்றிருப்பதை அறிய முடியும்.

தற்போது தொற்று அறிகுறிகள் ஆரம்பித்த ஆறாவது நாள் மருத்துவர் பரிந்துரையில் நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேன் எடுத்துப்பார்க்கலாம்.

அப்போது நுரையீரலில் கோவிட் நிமோனியாவின் தாக்கம் எத்தனை அளவில் உள்ளது என்பதை அறியலாம். அதைப் பொறுத்து மருத்துவமனையில் அட்மிட் ஆவது குறித்து மருத்துவர் அறிவுரை வழங்குவார். மருத்துவமனையில் நமக்கான படுக்கை கிடைக்கும் வரை வீட்டில் ப்ரோனிங் எனும் 'குப்புறப்படுத்தல்' நிலையை கடைப்பிடித்து வந்தால், நம்மால் நுரையீரலின் ஆக்சிஜன் அளவுகளை சிறப்பாகப் பராமரிக்க முடியும்.

வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகப் படுத்து இருப்பதால் நுரையீரலுக்கு பளு குறைந்து குறைவான வேலை செய்து நிறைவாக ஆக்சிஜனை அளிக்கும். மருத்துவர் இது கூடவே தேவைப்பட்டால் கோவிட் சார்ந்த உள்காயங்கள் உண்டாகியிருக்கின்றனவா என்பதை INFLAMMATORY MARKERS பரிசோதனையின் மூலம் கண்டறிவார். அதில் உள்காயங்கள் மற்றும் ரத்த உறைதல் தன்மை அதிகமாவது தெரிந்தால் அதற்குரிய ரத்த உறைதல் தடுப்பு மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை குன்றச் செய்யும் ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்படும்.

ஆக்சிஜன் அளவுகள் குறைவது தொடர்ந்தால் உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்படும்.

கூடவே ரெம்டெசிவிர் எனும் வைரஸ் கொல்லி மருந்தும் ரத்த நாளம் வழி ஏற்றப்படும். மிக அதிகமான பாதிப்பை தரும் சைட்டோகைன் பிரளயம் ஏற்பட்டால் உடனே டொகிலிசுமாப் எனும் மருந்து ஏற்றப்பட்டு உயிர் காக்கப்படுகின்றது.

குழந்தை பருவத்தினரைப் பொறுத்தவரை தொண்டை வலி, இருமல், மூக்கடைப்பு/மூக்கு ஒழுகுதல் என்று சாதாரண கரோனா வெளிப்படும். சாதாரண கரோனாவில் குழந்தைகள் வேகமாக மூச்சுவிட மாட்டார்கள். சாதாரணமாக மூச்சு விடுவார்கள்.

அதுவே மிதமான கரோனா தொற்றில் 2 மாதத்துக்கு குறைவான குழந்தை எனில் நிமிடத்துக்கு 60 தடவைக்கு மேல், 2-12 மாதக் குழந்தைகள் நிமிடத்துக்கு 50 முறைக்கு மேல், 1 - 5 வயது வரை உள்ள குழந்தைகள் நிமிடத்துக்கு 40 தடவைக்கு மேல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நிமிடத்துக்கு 30 முறைக்கு மேல் மூச்சு விடுவார்கள்.

இந்த அறிகுறியை குழந்தைகளின் பெற்றோர்கள் கண்காணித்து உடனே குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்குக் கொடுத்து விட வேண்டும். இந்த நிலையில் ஆக்சிஜன் அளவுகளை பரிசோதனை செய்து வர வேண்டும்.

90% க்கு கீழ் குறைந்தாலோ மூச்சு விடும்போது அதிக சிரமத்துக்கு உள்ளானாலோ, அதிக தூக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டாலோ உடனே மருத்துவனையில் அட்மிட் செய்து சிகிச்சை வழங்கிட வேண்டும்.

இந்த நிலையைக் கண்காணிக்காமல் விட்டால் குழந்தைகளுக்கு தீவிர கரோனா நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொற்றுக்குள்ளாகும் ஒவ்வொரு 100 பேரிலும் 80% வீடுகளிலேயே தனிமைப்படுத்தத் தகுதியுள்ள சாதாரண தொற்றுக்கு உள்ளாகுபவர்களே ஆவர்.

இவர்களுக்கு நோய்த்தொற்று அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. மீதம் உள்ள 20 பேரில் 17 பேருக்கு மிதமான கரோனா தொற்று ஏற்படும். இவர்களுக்கு ஆக்சிஜன் தேவை ஏற்படலாம். 3 நபர்களுக்கு மட்டுமே தீவிர கரோனா ஏற்பட்டு செயற்கை சுவாச சிகிச்சை வரை செல்லும் வாய்ப்பு உண்டாகின்றது. எனவே, அச்சப்படாமல் எச்சரிக்கையுடன் அறிகுறிகளையும் ஆக்சிஜன் அளவுகளையும் கவனித்து வந்து சரியான நேரத்தில் முறையான சிகிச்சைகளை எடுத்தால் கரோனாவை நிச்சயம் வெல்ல முடியும்.


மக்கள் கருத்து

சீமராஜாNov 16, 2022 - 03:06:19 PM | Posted IP 162.1*****

முதலில் HIV +ve இருக்கிறதா என்று பார்க்கனும்.....காலரா முதல் கொரனா வரை பாதிக்ககூடிய ஒரே நோயாளி: AIDS நோயாளி.....காரணம்: Human Immuno-deficiency Virus....இதன் பொருள்: நாளுக்கு நாள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டு இருக்கும்..... Tn 72 AL 2029 08056708113

tamilanFeb 10, 2022 - 01:25:02 PM | Posted IP 173.2*****

கொரோனா பற்றிய மிகவும் தெளிவான விளக்கங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory