திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (15 of 53)

திருநெல்வேலி சரித்திரம் என்ற நூலில் டாக்டர் கால்டுவெல் தாமிரபரணி அணைக்கட்டைப் பற்றி சில குறிப்புகள் தந்துள்ளார். அதை பற்றி விவரம் தருகிறேன்.
 
அரியநாயகி புரம் அணைக்கட்டு பற்றி அவர் குறிப்பிடும் போது அந்த அணைக்கட்டுக்கும் நாயக்கர் காலத்தில் மந்திரியாக பணியாற்றிய அரியநாதருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்கிறார். ஆனால் அணைக்கட்டு அருகே அரியநாயகி புரம் என்ற ஊர் உள்ள காரணத்தினால் அரியநாயகி அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது என்ற கருத்தை அவர் ஒத்துக்கொள்கிறார்.
 
சுத்தமல்லி அணைக்கட்டு குறித்து அவர், நெல்லை நகரம் மற்றும் சுற்றுபுறத்திற்க்கு தேவையான தண்ணீரை தருகிறது என்கிறார். பழவுர் அணைக்கட்டு குறித்து அவர் பாளையங்கோட்டை சுற்றுபகுதியில் ஓடுவதால் பாளையம் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இந்த கால்வாயை கன்னடியன் ஒருவன் வெட்டியதாக கால்டுவேல்டு கருத்து தெரிவிக்கிறார். ஆனால் இவன் முந்தைய கன்னடியன் கால்வாய் வெட்டியவன் அல்ல. அவனுக்கு பின்னால் வந்தவன் என்றும் கருத்து தெரிவிக்கிறார்.
 
மருதூர் அணைக்கட்டினை குறித்து புதுத்தகவல் இவர் நூலில் நமக்கு கிடைக்கிறது. அதாவது தாமிரபரணியில் உள்ள எல்லா அணைக் கட்டுகளிலும் அதிகப்படியான நெல் விளைச்சல் தர வல்லது மருதூர் அணை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அணைக்கட்டு பாளையம்கோட்டையில் இருந்து சில மைல் தூரத்தில் இருப்பதாகவும், இந்த அணைக்கட்டு 1792 இல் திரும்பக் கட்டப்பட்டது. இதை டோரின் கலெக்டராக இருந்த போது கட்டினார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது குறித்து கல்வெட்டு உள்ளது. மேலும் கர்னல் கால்டு வெல்லினால் 1807ல் மறுபடியும் இந்த அணை திருத்தப்பட்டது. என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார்.
 
இந்த மருதூர் கால்வாய் பற்றி செவி வழிகதை ஒன்று உண்டு. ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட ராசாவிற்கு மருதவல்லி குமுதவல்லி என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். அவர் தாமிரபரணி நதியில் ஒரு அணையை கட்ட ஆசைப்பட்டார். ஆகவே இந்த அணையை கட்டும் நபருக்கு தன் இரு மகளையும் கட்டி தருவதாக தண்டோரா போட்டாராம். அப்போது ஒரு வயதான முனிவர் கனம் பொருந்திய புதப்படைகளோடு மிகப்பெரிய கற்களை எல்லாம் கொண்டு வந்து போட்டு இரவோடு இரவாக கட்டினாராம்.
 
மறுநாள் ராசகுமாரிகளை கட்டி தர வேண்டி அரசனிடம் சென்றாராம்.. அரசனும் வேறு வழியில்லாமல் அந்த முனிவருக்கே இருவரையும் கட்டிக்கொடுத்து விட்டாராம். இதனால் மனமுடைந்து போன இருவரும் இந்த அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் நினைவாக மருதவல்லி, குமுதவல்லி கோயில் தற்போதும் மருதூர் அணையில் உள்ளது. இந்த கோயிலில் மழை பெய்யவில்லை என்றால் விவசாயிகள் பொங்கலிட்டு இந்த தெய்வத்துக்கு படைப்பார்கள். அப்போது மழை பெய்கிறது.
 
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு
 
இந்த அணைக்கட்டுதான் தாமிரபரணியில் ஆங்கிலேயர் கட்டிய ஓரே ஒரு அணை. இது தாமிரபரணியின் கடைசி அணை. இந்த அணை குறித்து டாக்டர் கால்டுவேல்டு கூறுவது, புதுக்குடிக்கும், ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடையே கட்டப்பட்ட இந்த அணை லெப்டினண்ட் செப்பர்டு என்பவரால் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் டிசைன் 1853ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. அணையின் நீளம் 800 கெசம். இந்த அணை 11 ஆயிரம் செலவில் கட்டப்பட்டது. 
 
இவர் தலையணை மற்றும் நதியுண்ணி அணை குறித்து விளக்கமாக கூறிப்பிடவில்லை. ஆனாலும் இவர் காலத்தில் அந்த அணையும் இருந்திருக்கத்தான் வேண்டும். திருவைகுண்டம் வடகால் அருகே உள்ள ஒரு கல்வெட்டை வைத்து ஆராய்ந்த போது இந்த அணைக்கட்டு டிசைன் 1853ல் அமைக்கப்பட்டது என்றும், அது 1869 முதல் 1873 வரை கட்டி முடிக்கப்பட்டது என்றும் தெரிகிறது. 
 
 இதை கண்காணிப்பாளர் குளனெல் டபிள்யு.எச். கார்சிலி என்பவரும், செயற்பொறியாளர் எப்.எஸ்.செப்பர்டு என்பவரும் கட்டி முடித்துள்ளனர். 15.3.1941ல் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மேலே உள்ள பாலத்தை அப்போதைய மாவட்ட போர்டு தலைவராக இருந்த கோபாலநாயக்கர் திறந்து வைத்து உள்ளார். தற்போது இந்த பாலம் உறுதியாக இருந்தாலும் அகலமாக இல்லாத காரணத்தால் இதனருகே மற்றொரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. (செப்டம்பர் 2009)


Favorite tags



Tirunelveli Business Directory