திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (19 of 53)

எள்ளிலும் சிறிய இலை என்ன இலையோ?
 
இப்பகுதியில் ஒரு விசேஷமான மரம் உள்ளது. அந்த மரம் பற்றி மன்னர் காலத்தில் பெரிய விசேஷமே நடந்து இருக்கிறது. பாண்டிய மன்னர் ஒருவர் இலவணிகர் பெண்ணிடம், எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த இலவணிகர் பெண்ணே! எள்ளிலும் சிறிய இலை என்ன இலையோ என்று கேட்டார்.
 
அதற்கு எதிர்கணை தொடுத்தாள் அந்த இல வணிகர் பெண். பூவிலே பிறந்து பூவிலே வாழும் பூவுலகு ஆளும் ராசாவே! பூவிலே மூவண்ண பூ பூக்கும் மரம் எதுவோ? என்று கேட்டார். என்ன திகைப்பாக இருக்கிறதா இந்த இரு கேள்விக்கும் பதில் ஒன்று தான். அரசவையில் எல்லோரும் அப்படியே அசந்து போய் விட்டனர். அரசர் என்ன சொல்வதென்று திகைத்து நின்றார். மந்திரி மட்டும் புன்னகைத்து கொண்டார்.
 
உடனே அரசர், பெண்ணே உன்னிடம் நான் விடுகதை போட்டேன். பதிலுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு எதிர் புதிர் போடுவது சரிதானா? என்று கேட்டார். உடனே இளவணிகர் பெண், அரசே தாங்கள் கேட்ட புதிருக்கும் நான் கேட்ட புதிருக்கும் ஒரே விடை தான். ஆம் வெடதழை என்பதே அந்த புதிருக்கு விடை என்றாள். வேடதழை செடி இந்த தாமிரபரணி நதிக்கரையில் நிறைய உள்ளது. அந்த செடியின் இலைகள் எள்ளைவிட சிறியதாக உள்ளது என்றால் உண்மை தான்.
 
அதே போல் அதில் பூக்கும் பூ மூன்று கலரில் மாறுகிறது. முதலில் பார்க்கும் ரோஸ் கலரிலும் பின் சிவப்பு கலரிலும் பூக்கும் போது வெள்ளை கலரிலும் மாறுகிறது. இந்த விந்தையை நாம் இன்று சென்றாலும் பார்க்கலாம். இதே போல் இங்கு வாழும் குரங்குகள் விந்தையாக உள்ளன. சில பகுதி குரங்கு வெள்ளை கலரில் சில பகுதியில் மட்டும் கருமந்தி குரங்குகளும் காணப்படுகிறது.
 
மலையில் லோயர் கேம் பகுதியில் உள்ள பொறியாளர் ஓய்வகத்தில் இருந்து அகத்தியர் அருவி வரை கட்டப்பட்டிருக்கும் படியின் மேல் கருமந்திகள் காணப்படுகிறது.
 
 
இண்டன் செடியில் மாட்டிய மான்குட்டி
 
இங்குள்ள மற்றொரு முள்செடியின் பெயர் இண்டன் செடி. இந்த முள் செடி பரவலாக பரந்து கிடக்கிறது. இதன் முள் நாலுபுறமும் பிடித்து மாட்டுவது போல் கொக்கி சைசில் இருக்கிறது. இந்த முள் செடியில் தப்பி தவறி ஏதாவது மிருகம் மாட்டி விட்டால் அவ்வளவுதான். அதை காப்பாற்ற வேண்டும் என வெளியே எடுத்தால் கூட சதை அப்படியே கிழிந்து விடும். இப்படிதான் ஒரு முறை மான் ஒன்று உள்ளே மாட்டிக் கொண்டதாகவும், அதை காப்பாற்ற முயற்சி செய்து உயிரோடு மானின் உடலை கிழித்து தான் வெளியே எடுத்தார்கள் என்று இந்த பகுதி நபர் ஒருவர் கூறுகிறார்.
 
இண்டன் செடியைப் பற்றி கூறும் போது, கிராமத்தில் பிடிக்காத மனைவியுடன் வாழ்க்கைப்பட்ட கணவனைப் பார்த்து இண்டன் முள்ளில் மாட்டிக் கொண்டது போல் மாட்டிக் கொண்டாயே என பெரியவர்கள் பேசுவார்கள். மண வாழ்க்கையில் மாட்டிக் கொண்டவன் எப்படி மீள முடியாமல் தவிக்கிறானோ அதே போன்று தான் இச்செடியில் மாட்டிக் கொண்டவர்களும் தப்பிக்க இயலாது. நல்ல உதாரணம் தானே!


Favorite tags



Tirunelveli Business Directory