திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (21 of 53)
பாபநாசம் ஆற்றில் மரண நீர்ச்சுழல்
தமிழ் முனிவர் அகத்தியருக்காக சிவபெருமான் - பார்வதி திருமணக் கோலத்தில் காட்சியளித்ததாக புராணம் கூறும் கோவில் தான் பாபநாசத்திலுள்ள சிவன் கோவில். இந்த கோவிலின் முன் தாமிரபரணி ஆறு ஓடுகிறது.
இந்த ஆற்றினுள் பக்தர்கள் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் சென்று விடாமல் தடுக்க தடுப்பு வேலி போட்டிருக்கிறார்கள். இந்த வேலியைத் தாண்டியுள்ள ஆற்றின் மையப் பகுதியில் பயங்கரமான நீர்ச்சூழல் ஒன்று உள்ளது. இதில் சிக்கினால் மரணம் தான் முடிவு. இறந்தவர்களின் பிணம் கூட இதுவரை கிடைத்தது இல்லை.
இந்த நீர்ச்சூழல் குறித்து கிழவனேரி ஆர்.சி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்தீஸ்வரன்(1999) கூறிய தகவல்.. ஒரு வீட்டில் தாயை இழந்து விட்ட குழந்தைகளான அண்ணன் தங்கை இருவரும் தவித்தனர். இவர்களின் தந்தையின் மறுமணத்துக்கு பிறகு சித்தியிடம் வளர்ந்து வந்தனர். மூத்தாள் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்தாள் சித்தி. ஒருநாள் கையிலிருந்த அகப்பை கணையால் மகன் தலையில் அடித்தாள். அவன் ரத்தம் வழியும் தலையுடன் அவளிடமிருந்து தப்பித்து ஓடிவிடுகிறான்.
அவன் எங்கே சென்றான். என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியவில்லை. வருடங்கள் உருண்டன. அண்ணனை பிரிந்த தங்கையும் சித்தியின் கொடுமை தாளாமல் ராசாவின் அரண்மனையில் குதிரை லாயத்தில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கு குதிரைகளுக்கு கொள்ளு வேக வைத்து போடும் வேலை அவளுக்கு. அங்கு குதிரை வீரனான இளைஞன் இவளை காதலிக்க இருவரும் மணந்து கொண்டனர். ஒருமுறை போரில் அவன் காயமடைந்து திரும்பினான். அப்போது மனைவி அந்த காயத்துக்கு மருந்து போடும் போது தலையில் பழைய வெட்டுக் காய தழும்பை பார்த்து திடுக்கிட்டாள்.
அவனிடம் அது பற்றி கேட்கிறாள். கொடுமைக்கார சித்தி தலையில் அகப்பை கணையால் அடித்து ஏற்படுத்திய காயம் என்ற விபரத்தை அவன் கூற இருவருக்கும் உண்மை தெரிய வருகிறது. காலத்தின் கோலத்தில் அண்ணன் தங்கையே தம்பதியராக மாறும் அவலகோலம் நடந்து விட்டதே என்று வேதனைப்பட்ட இருவரும் பாபத்தை தீர்க்க அகத்தியர் மலைக்கு வந்தனர்.
அங்கு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தங்கள் உயிரோடு பாவத்தையும் தொலைத்தார்கள். அந்த அண்ணன் தங்கை தங்கள் பாவத்தை நாசம் செய்த இடத்தில் தான் ஆற்றில் பயங்கரமான நீர்ச்சூழல் உள்ளது. இப்படி பாவங்களை தீர்ப்பதால் தான் இந்த தலம் பாபநாசம் ஆயிற்று என்றார் ஆசிரியர் அகஸ்தீஸ்வரன்.