திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (25 of 53)
கருடா மலர் பூத்த போது
இந்த பூங்குளத்தை சுற்றி வாழும் காணிகள் தாமிரபரணியை கடக்க கயிறு பாலம் கட்டுவது வழக்கம். இந்த கயிறு பாலம் வழியாகத் தான் எதிரில் உள்ள தோட்டத்துக்கு செல்வார்கள். இவர்கள் கயிறு பாலம் கட்டும் போது கருடா மலர் எவ்வளவு பூக்கிறதோ அதை பொறுத்து தான் கயிறு பாலம் கட்டி முடிக்கப்படுமாம்.
1992-93ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால் காணிகள் மிகவும் உயரமான கயிறு பாலத்தை தாமிரபரணி மீது கட்டி இருந்தனர். அந்த சமத்தில் கூட கயிறு பாலம் வெள்ளத்தில் மூழ்கவில்லை. காரணம் கருடாமலர் மிக அதிகமாக பூத்திருந்தது. இந்த காரணத்தால் கயிறு பாலத்தை மிக உயரமாக கட்டிவிட்டனா காணிகள். சில ஆண்டுகள் கருடாமலர் பூக்கவில்லை அந்த நேரத்தில் கயிறு பாலமும் கட்டமாட்டார்களாம். ஏன் என்றால் அப்போது மழை பெய்யாது.
25 அடியில் சகதி
பாபநாசம் அணையில் 25 அடி சகதி நிரம்பி இருக்கும். அதனால் தான் 35 அடிக்கு மேல் தண்ணீர் திறக்கக்கூடாது என்று ஒரு விதியை வைத்து இருக்கிறார்களாம். மேலும் இந்த 25 அடியில் தான் முதலைகள் ஜூவனாம்சம் நடத்த வேண்டியது உள்ளது. எனவே மேலணையில் 25 அடிக்கு கீழ் தண்ணீர் திறக்கமாட்டார்கள்.
பாநாசம் சிவன் கோயில் அருகே பல அற்புதம் நடக்கும். சில வேளைகளில் சில வித்தியாசமான சாமியார்கள் இந்த இடத்திற்கு வருவார்கள். குறிப்பாக தற்போது கூட வாய் போசமல் முகத்தினை மறைக்கும் அளவுக்கு உத்திராட்சம் அணிந்து இந்த கோயிலில் பவணி வரும் பக்தர்கள் சித்தராக உள்ளனர். ஒரு காலத்தில் வயதான பெண் ஒருவர் இந்த பகுதியில் வாழ்ந்துள்ளார். அவர் யாரிடமும் தானாக சென்று யாசகம் கேட்பதில்லை. அவர் எதை உண்பார் எப்படி வாழ்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
ஒரு சமயம் ஒருவர் அந்த பெண் கல்லால் தாக்கியுள்ளார். ரத்தம் வடிந்த அந்த பெண் சத்தம் போட்டுக்கொண்டே ஒடினார். ஆனால் மறு நாள் அவருக்கு காயம் பட்ட இடத்தில் இரத்த காயம் இருந்தற்கு சுவடே இல்லாமல் இருந்தது. இதே போல் இந்த பகுதியில் ஒரு சாமியார் இருந்துள்ளார். அவர் பாபநாசம் வீதிக்குச் சென்று கடையில் உள்ள பலகாரம் எதையாவது கை வைத்து தின்று எச்சில் ஆக்குவார். அன்றைக்கு அந்த கடைக்காரருக்கு மிகப்பெரிய யோகம் அடிக்கும். ஆம். அன்று அந்தக் கடைக்காரர் அந்தப் பலகாரம் எவ்வளவு செய்து வைத்தாலும் விற்று விடுமாம்.
இந்த சாமியார் நமது கடையில் வந்து கை வைக்கமாட்டாரா? நமது கடையில் உள்ள பலகாரத்தை எடுத்து சாப்பிட மாட்டாரா என்று பல கடைக்காரர்கள் காத்து கிடப்பார்களாம். காரணம் அவர் யார் கடையில் பலகாரம் எடுத்து தின்கிறாரோ அந்த பலகாரம் அக்கடையில் எவ்வளவு இருந்தாலும் உடனே விற்று தீர்ந்து விடுமாம். அந்த அளவுக்கு ராசியான இந்த விபூதி சாமியார் பற்றி தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பெரியவர்களுக்கு கூட தெரியும் என்று கூறுகிறார்கள். மற்றுமொரு வேதணையான சம்பவமும் இந்த கரையில் நடந்துள்ளது.
சீவலப்பேரி அருகில் சிற்றுர்ர் ஒன்றில் ஒருவர் ஏழ்மை நிலைமை தாங்க முடியாமல் தனது 8 வயது சிறுமியை தலையில் கல்லை கட்டி பொருநை நதி ஆற்றுக்குள் இறக்கி விட்டாராம். அந்தக் குழந்தை அப்பா என்னை ஆற்று வெள்ளம் அடித்து கொண்டு போய்விடுமே என்று கேட்டுள்ளது. அதற்கு நான் உன்னுடனே இருக்கிறேன். நீ அந்த கரைக்கு போ என்று நயவஞ்சகமாக பேசி அந்த பெண் குழந்தையை தாமிரபரணி ஆற்றில் இறக்கிவிட்டாராம்.
தந்தை சொல் கேட்டு தாமிரபரணிக்குள் சென்ற அந்த பெண் குழந்தை ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.அதன் விளைவு தாமிரபரணி அன்னை கோபமாக மாறியது. அந்த கோபம் அவரது குடும்பம் மீது சாபமாக மாறியது. எனவே அந்த குடும்பத்தில் அன்று முதல் 4 தலைமுறையாக் பெண் குழந்தை பிறக்கவில்லையாம். ஆண் குழந்தையும் ஊனமாகவே பிறந்தது. இதனால் அவர்கள் மணம் வருந்தினர். அவரின் வாரிசுகள் தாமிரபரணி அன்னைக்கு பொங்கலிட்டு வணங்கிய பின்பு 4வது தலைமுறையாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறுகிறார்கள்.
ஆக தாமிரபரணி தாய் உயிரோட்டம் உள்ளவளாகவே இருக்கிறாள் என்பது உண்மை. நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பல உதவிகளை செய்கிறாள். குடிக்க தண்ணீர், தொழில் சாலை நடக்கத் தண்ணீர், விவசாயம் செய்ய தண்ணீர், மின்சாரம் தயாரிக்க தண்ணீர் என்று தினமும் ஒரு மனிதனுக்கு சராசரி 40 லிட்டர் தண்ணீர் தரும் பரணி தாய்க்கு, தவறு செய்யதால் தட்டி கேட்கவும் தெரியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். அந்த தாமிரபரணியை போற்ற இது வரைக்கு நாம் என் செய்துள்ளோம்.