திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (27 of 53)
யாழ் போட்டியில் இராவணனை வென்ற அகத்தியர்
பொதிகை மலைப்பகுதியில் அகத்தியர் காலத்தில் இரண்டு அரக்கர்கள் பழம் போன்ற உருவம் கொண்டு மலையடிவாரத்தில் படுத்துக் கொள்வார்கள். யாராவது மானிடர் அப் பழத்தை எடுத்துச் சாப்பிட்டால் மறு நிமிடம் வயிற்றுக்குள் சென்றவுடன் அரக்கர்கள் உருவெடுத்து விடுவார். இதனால் மனிதர்கள் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வந்து விடுவது அரக்கர்களின் வழக்கம். இதனால் மானிடர்கள் பிணமாவார்கள்.
இந்த சம்பவம் அகத்திய மாமுனியின் காதுக்கு பக்தர்கள் கொண்டுச்சென்றனர். இதனால் அந்த அரக்கர்களுக்கு பாடம் புகட்ட அகத்தியர் உடனே புறப்பட்டார். பழம் போல் கிடந்த அரக்கர்களை அகத்தியர் எடுத்து உண்டார். அகத்தியர் வயிற்றுக்குள் சென்ற அரக்கர்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தனர். அரக்கர்கள் வெளியே வர நினைத்து உருவம் எடுத்தனர்.ஆனால் அகத்தியர் வேறுமாதிரி நடவடிக்கை எடுத்தார்.
அரக்கர்கள் அகத்தியரின் வயிற்றை கிழித்துக் கொண்டு வரும் முன்பு அகத்திய முனிவர் அவர்களை செரிக்க வைத்து ஏப்பம் விட்டு விட்டார். இந்த அரக்கர்கள் தொந்தரவு அன்றோடு நீங்கியது. ஒருமுறை இலங்கை அரசன் இராவணன் இப்பகுதி மக்களை துன்புறுத்திக் கொண்டு இருந்தான். அவனை அறிவுருத்தினார் அகத்தியர். ஆனால் இராவணனோ.. என்னோடு யாழ் போட்டியில் நீர் வெற்றி பெற்றால் உமது சொல்லை நான் கேட்கிறேன். என்று ஆணவமாக கூறினான். அதன் படி, அகத்தியர் அவனை யாழ் போட்டிக்கு அழைத்து வென்றார்.
அதன் பின்பு இராவணன் அகத்தியரின் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ஆனால் அகத்தியர் அவனிடம் நீ என்னிடம் தோற்றுப்போய்விட்டாய். ஆகவே என் சொல்லை நீ கேட்க வேண்டும் என்று சொல்லி அவனை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைத்தார். தாமிரபரணி என்ற இந்த பொருநை நதியை அகத்தியர் உருவாக்கும் முன்பு இங்கு வேத தீர்த்தமும், முக்களாலிங்கம் கோயிலும் இருந்துள்ளது. தாமிரபரணி நதியை உருவாக்கியவர் அகத்திய மாமுனிவர் தான்.
அது குறித்த புராண கதை
இறைவனுக்கு இச்சா சக்தி, கிரியா சக்தி,ஞானசக்தி என மூன்று சக்திகள் இருந்தது. ஞானம் என்றால் அறிவு. கிரியா என்றால் செயல், இச்சை என்றால் விருப்பம். இந்த மூன்று சக்திகளின் மூலம் உலகிற்கு உணர்த்துவது என்னவென்றால் ஒரு செயலை செய்ய விருப்பம் வேண்டும். விருப்பம் அறிவின் பயனாக தோன்றுவது ஆகும் என்பதே இதன் கருத்து. ஞானசக்தி இலளிதை என்று பெயர் பெற்று விளங்கியது. இலளிதைக்கு கிரியா சக்திகள் பணி செய்து வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இலளிதை அவர்களுக்கு வேண்டிய வரம் கேளுங்கள் நான் தருகிறேன் என்று கூறினாள்.
அதன்படி அவர்கள் இருவரும் இலளிதை நாராயணனாக வந்து எங்கள் இருவரிடம் கூட வேண்டும் என்று வரம் கேட்டனர். அதன்படி வரம் கொடுத்தாள் இலளிதை. இலளிதை திரிபுரைதானே அவள் எப்படி சிவனை விட்டு பிரிவாள். உமையொருபாகன் என்று சிவபெருமானுக்கு பெயர் வருவதற்கு காரணமே அதுதான். சிவனையும் பிரியக் கூடாது. இச்சா, கிரியா சக்திக்கு கொடுத்த வரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று நாரணி என்ற பெண் உருவமும், நாரணன் என்ற ஆண் உருவமும் எடுத்த இச்சா, கிரியா சக்திகளில் விருப்பங்கள் நிறைவேற்றினாள்.
இந்த கதை மூலம் சக்தியும், அரியும் ஒன்றே என்று உலகிற்கு உணர்த்தப்படுகிறது. இதற்கிடையில் சிவனும், நாரணியும் நீர் விளையாட்டில் விருப்பம் கொண்டனர். இதன்மூலம் கங்கை என்னும் மகாநதி உருவானது. தேவியின் மார்பில் புரண்டு ஓடிய நீர், மார்பில் உள்ள குங்குமம் சாந்து தோய்ந்து தாமிர நிறமானதால் அது தாமிரபரணி என்றும் பெயர் பெற்றது.
கமண்டலம் - காவிரி:
அதைத்தான் நாராயணி தனது முத்து மாலையாக எடுத்து வைத்து இருந்தாள். அகத்தியர் தன் மனைவியுடன் பொதிகை வரும் போது அந்த முத்து மாலையை அகத்தியர் வசம் கொடுக்க அவர் முன்பு தாமிரபரணி பெண்ணாக தோன்றி நின்றது. பின்பு அதை கமண்டலத்தில் அடைத்துக் கொண்டு அகத்தியர் தெற்கு நோக்கி பயணமானார். இவர் குடகு மலையில் கமண்டலத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு தியானம் செய்த போது விநாயகர் காக்கை உருவெடுத்து வந்து அந்த கமண்டலத்தை கவிழ்த்தார்.
இதைக் கண்ட அகத்தியர் சினங் கொண்டவுடன், பயந்து போன விநாயகர் காக்கை உருவத்தை விட்டு மறைந்து சுய உருவம் எடுத்தார். அவரைக் கண்டவுடன் அகத்தியர் வணங்கி நின்றார். பின்பு சிவ பூஜைக்காக இந்திரன் அமைத்த பூங்கா நீரில்லாமல் வாடுவதை கண்டு தான் நான் இந்த தவறான செயலை உமது அனுமதியின்றி செய்து விட்டேன் என்னை மன்னித்து விடும் என்று விநாயகர் அகத்தியரிடம் கூறினார். அகத்தியரும் ஒரு நல்ல காரியத்துக்குத்தானே செய்தீர். அதை பற்றி தவறில்லை என்று கூறினார்.
அன்று முதல் குடகுமலையில் காவிரி தோன்றியது. காகம் வடிவில் விநாயகர் வந்து தட்டி விட்டதால் கா... (காகம்) தண்ணீர் விரிந்து செல்வதால் கா..விரி என்று பெயர் பெற்றது. காவிரி தென்நாட்டை வளம் பெற செய்து வருகிறது. அதன்பின் அகத்தியர் அந்த இடத்தினை விட்டு கிளம்பினார். பின்னர் பாபநாசம் வந்த அகத்தியர் அங்கிருந்த வேததீர்த்தத்தை வணங்கி முக்களாலிங்க மூர்த்தியையும் உலகம்மையையும் வணங் கினார். பின்பு சந்தன பொதிகைக்கு அகத்தியர் சென்றவுடன் பூமி சமன் ஆனது.
அதன் பின்பு சித்திரைவிசு அன்று இறைவனின் திருமண காட்சியை அகத்தியர் கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் இடத்தில் கண்டார். அன்று தாமிரபரணி ஆற்றில் பாபநாசத்தில் குளிப்பவர்களுக்கு பாவம் நீங்க வேண்டும் என சிவனிடம் அவர் வேண்டிக் கொண்டார். அதன்படி பக்தர்களுக்கு பாபநாசத்தில் வந்து தாமிரபரணியில் நீராடி சிவனை வேண்டி நின்றால் வேண்டிய வரம் கிடைக்கிறது. அதனால் தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை விசுக்கு பாபநாசம் வரும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சேரன்மகாதேவியில் ஓடும் தாமிரபரணி
தாமிரபரணி உருவானது:
பின்பு இறைவனின் ஆணைப்படி தலைப் பொதிகைக்கு அகத்தியர் சென்றார். அந்த இடத்தில தன்னிடமிருந்த மீதி கமண்டலத்தில் உள்ள நீரை அகத்தியர் விட்டார். அது 3 பிரிவாக பிரிந்து ஒன்று சேர நாட்டில் பாய்ந்து மேற்கே அரபிக் கடலிலும், மற்றொன்று வடக்காக ஓடி குடகு மலையிலும், 3வது தாமிரபரணி என்ற பெயருடன் தெற்கு நோக்கி ஓடி வங்காள விரிகுடாவிலும் கலக்கிறது. இதில் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி தான். இந்த தாமிரபரணி பல தீர்த்த கட்டங்களை கொண்டது. இந்த நதியில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தீர்த்தக் கட்டத்தில் குளிப்பது மிகவும் விசேஷமாகும்.