திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (24 of 53)
ரத்தத்தை சுத்தப்படுத்தும் இஞ்சுகுழி
பாண்டிய மன்னர்களின் மறைவிடமாகவும் ஒற்றர்கள் தங்குமிடமாகவும் பாண்டியன் கோட்டை இருந்துள்ளது. அரசர்கள் மறைவிடமாகவும் ஒற்றர்கள் தங்குமிடமாகவும் அமைந்துள்ளது. இந்த பாண்டியர் கோட்டையை அடுத்து கொட்டுதளம் உள்ளது. இதற்கு ஒற்றர் தளம் என்றும் பெயர். போர்க்காலங்களில் போர்முரசு கொட்டும் தளமாகவும் அமைந்திருக்க வேண்டும்.
குறிப்பாக போர்க்காலங்களில் இங்கு படைவீரர்கள் எல்லாம் தங்கி இருந்துள்ளனர். அவர்களை போருக்கு திரட்ட முரசு கொட்டிய காரணத்தால் கொட்டுதளம் என்று பெயர் வந்து இருக்கிறது. தென் மாவட்டங்களில் மேட்டூர் அணைக்கு பிறகு பெரிய மின்நிலையம் தாமிரபரணி கரையில் தான் உள்ளது. இங்கு சேர்வலாறு, அகத்தியர் அருவி ஆகிய 2 இடங்களில் இரண்டு மின் உருவாக்கும் நிலையம் உள்ளது என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம்.
ஏகபொதிகையை தொடர்ந்து நாக பொதிகை உள்ளது. இந்த நாக பொதிகையில் 5 சிகரங்கள் கொண்டு பஞ்சமுகமாக உள்ளது. இங்கு மனிதர்களே செல்ல முடியாதபடி காட்டு மரம் உள்ளது. இங்கு ஒளிரும் ஜோதி மரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அது உண்மை என்பது போல் தூரத்தில் இருந்து பார்க்கும் போது இரவு நேரங்களில் சில ஒளிகள் இப்பகுதியில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இப்போதும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். அகத்திய முனிவரின் சீடரும், பிரம்மனின் பேரனுமான உரேமோச முனிவர் மோட்சம் பெற அவர் வணங்கிய நவ கைலாயங்கள் இந்த நதியில் உள்ளது. அவை பாபநாசம், சேரன்மகாதேவி,கோடகநல்லூர், சங்காணி, முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை ராஜபதி சேர்ந்தமங்களம் ஆகிய நவகைலாயம் தாமிரபரணி நதிக்கரையில் தான் உள்ளது.
வைணவத்திற்கு பெயர் பெற்ற தென்திருப்பதிகளுள் ஒன்றான திருவேங்கடநாதபுரம் - கருங்குளம் போன்றவையும் நவதிருப்பதிகளும் (திருவைகுண்டத்தை சுற்றியுள்ள 9 ஸ்தலங்களும), சிறப்பு தீர்த்த கட்டங்களில் இராமாயணத்தில் நடந்த கதைகளில் ஜடாயு இராவணனை எதிர்த்து சண்டையிட்டு உயிர் விட்ட ஜடாயுதீர்த்த கட்டம் போன்ற வராலாற்று சுவடுகளும் இங்குள்ளது. சிறு தெய்வ வழிபாடுகளும் இந்த தாமிரபரணியில் உள்ளது. சுடலைமாடசாமி கதை தோன்றியது மற்றும் இது வளர்ந்து விரிந்தது தாமிரபரணி கரையில் உள்ளது.
சுடலைமாடசாமி கேரளா சென்று பாம்பாட்டியாக கேரள மந்திரவாதி மகளை கரம் பிடித்து வந்தது போன்ற சுவையான கதைகள் நடந்ததும் அதன் மூலமாக சுடலைமாடசாமி அருள்பாவிக்கும் இடங்களும் தாமிரபரணி கரையில் தான் உள்ளது. தாய் தெய்வ வழிபாடு மிக அதிகமாக இருக்கிறது. முத்தாலங்குறிச்சி நல்லபிள்ளை பெற்ற குணவதி, முக்கூடல் முத்துமாலையம்மன், சக்திகுளம் செண்பகவல்லியம்மன் என்ற தாய்தெய்வம் மற்றும் கிராம தெய்வம் பல தாமிரபரணி கரையில் உள்ளது. தாமிபரணியில் பொதிகையிலும் மேலும் பல அதியசம் உள்ளது. அதில் கருடா மலர் ஒன்று.
ஐந்து தலை பொய்கைக்கு இன்னொரு பெயர் பூங்குளம். இந்த பூங்குளம் தாமிரபரணி தோற்றுவாயிடத்தில் இந்த விசித்திர மலர் ஒன்று உள்ளது. அந்த மலர் வருடா வருடம் பூக்கும். அதன் அளவினை வைத்து தான் மழை அளவை நிர்ணயம் செய்கிறார்கள் இந்த பகுதியில் உள்ள காணிகள்.